கடந்த ஆண்டு நவம்பர் 2020-ஐ விடவும் மதிப்பாய்வு செய்யப்பட்ட மாதத்தில் ஒட்டுமொத்த வாகன சில்லறை விற்பனை 2.7% சரிவைக் காட்டுகிறது என்று ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FADA) அறிவித்துள்ளது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமானது செமிகண்டக்டர் பற்றாக்குறை மற்றும் இடைவிடாத கொட்டித்தீர்த்த கனமழை.

நவம்பர் மாதத்தில் நடைபெற்ற ஒட்டுமொத்த சில்லறை வாகன விற்பனை அதற்கு முந்தய மாதத்தைவிட (அக்டோபரில் 1364526 யூனிட்) உயர்ந்திருந்தது. ஆனால் முந்தய ஆண்டு நவம்பர் 2020-உடன் ஒப்பிடுகையில் சுமார் 50,468 வாகனங்கள் குறைந்தே விற்பனையாகியுள்ளன. நவம்பர் 2020-ல் 18,68,068 வாகனங்களும், நவம்பர் 2021-ல் 18,17,600 வாகனங்களும் விற்பனையாகியுள்ளன.

அதே போல் ஆண்டு அடிப்படையில் பயணிகள் வாகன சில்லறை விற்பனையும் 19.44% சரிவையே சந்தித்துள்ளது. நவம்பர் மாதத்தில் 2,40,234 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகின இதுவும் முந்தய மாதத்தை விட 57,979 யூனிட்கள் குறைவே. இரு சக்கர வாகனப் பதிவு 0.75% குறைந்து 14,33,855 ஆக உள்ளது.

நவம்பர் மாதத்து விற்பனை சரிவிற்கு விங்கேஷ் குலாடி கூறும் காரணம்

“தீபாவளி, திருமணம் போன்ற பண்டிகை கால நாட்கள் இருந்த போதிலும் தென் மாநிலங்களில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக நவம்பர் மாத விற்பனை மிகவும் குறைவாகவே நடைபெற்றது.இந்தியாவின் கிராமப்புறங்கள் தனது வலிமையை காண்பிக்காத வரை, சில்லறை விற்பனை மந்த நிலையிலேயே தொடரும்.” என்று கூறினார் FADA அமைப்பின் தலைவர் விங்கேஷ் குலாடி.

தென் மாநிலங்களில் பெய்த கனமழை ஒரு காரணமாக இருந்தது போதிலும், அதே காரணத்தால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பயிர் இழப்பு, ஏறிவரும் பெட்ரோல், டீசல் எரிபொருள் விலை போன்ற காரணங்களும் வாடிக்கையாளர்கள் இருசக்கர வாகனங்கள் வாங்குவதை தடை செய்துள்ளது. இதை தொடர்ந்து விசாரணை அளவுகள் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை, இது கவலைக்கு ஒரு பெரிய காரணம் என்றே தெரிகிறது.