பிறக்கவிருக்கும் தை மாதம் ஒவ்வொரு விவசாயிக்கும் வளமான ஆண்டின் துவக்கமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வதே நம் விவசாயிகளுக்கு நாம் ஆற்றும் முக்கிய கடமை. தைப்பட்டத்துக்கு விதைகளை விதைக்க அவர்கள் தங்களை எல்லாவிதத்திலும் தயார் படுத்திக்கொண்டுள்ளனர். இன்னிலையில் அவர்கள் விதைக்க இருக்கும் விதைகள் தரமானவையா என்று விதைக்கும் முன் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என ஈரோடு விதைப்பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

ஏன் விதைகளை பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்?

விதையின் ஆதாரம் மற்றும் ரகம் ஆகியவற்றை பொறுத்தே மகசூல் சிறப்பாக கிடைக்கும். தூய்மையான, நல்ல முளைப்புத் திறன் கொண்ட, ஈரப்பதமுடைய விதைகளை பரிசோதனை செய்வதன் மூலம் நாம் எதிர்பார்த்த மகசூல் பெற முடியும் என்கின்றனர். நெல், எள், உளுந்து போன்ற பயிர்வகைகள் மட்டுமல்லாது, கத்தரி, சின்ன வெங்காயம், பந்தல் காய்கறி போன்ற விதைகளின் தரத்தையும் உறுதி செய்வது அவசியம்.

விதைகளை எங்கு பரிசோதனை செய்து கொள்ளலாம்?

தமிழக அரசின் விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று இணையதளத்தில் பதிவு செய்து, அந்த பதிவின் நகலில் பயிரின் ரகம், குவியல் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு ஒரு மாதிரிக்கு ரூ.30 என்ற கட்டணத்துடன் நேரடியாக அல்லது தபால் மூலமாக வேளாண்மை அலுவலர், விதைப்பரிசோதனை நிலையம், ஆனூர் அம்மன் காம்ப்ளக்ஸ், இரண்டாவது தளம், 68 வீரபத்திர வீதி, சக்தி சாலை, ஈரோடு என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.