ஜனவரி 9ம் தேதி ஆரம்பித்த விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் இன்னும் தொடர்ந்த கொண்டே தான் இருக்கிறது. வருடம் ஒரு முறை நியாயமாக வழங்கப்பட வேண்டிய கூலி உயர்வு 7 ஆண்டுகளாகியும் வழங்கப்படவில்லை என்ற காரணத்தால் திருப்பூர், கோவை மாவட்டத்தை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர்கள் சென்ற மாதம் ஜனவரி 9ம் தேதி முதல் போராடி வருகின்றனர்.

இந்த வேலை நிறுத்தத்தால் காடா துணி உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டு 1800 கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இத்தொழிலை நம்பியுள்ள பல லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்து தவிக்கின்றனர்.

கூலி உயர்வு தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெற்றாலும் கூட விசைத்தறி உரிமையாளர்கள் எதிர்பார்த்தபடி அது சாதகமாக அமையவில்லை. ஆகவே எந்தவித உடன்பாடும் இதுவரை எட்டவில்லை, போராட்டமும் தொடர்கிறது. இந்நிலையில் அவர்கள் அடுத்த கட்ட போராட்டம் செய்வது பற்றி தீவிரமாக ஆலோசித்து வருகிறார்கள் என்று தெரிகிறது.

பிப் 8ம் தேதி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் வினீத் அவர்கள் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையின் போது விசைத்தறி உரிமையாளர்கள் சோமனுர் ரகத்துக்கு 19%-மும், இதர ரகங்களுக்கு 15%-மும் கூலி உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், எஞ்சிய 4% & 5% கூலியை இன்னும் 4 மாதங்களில் வழங்க வேண்டும் என்றும், இதை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கையொப்பமிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

ஆனால் மார்க்கெட் நிலவரம் எப்போதுமே ஏற்ற இறக்கத்துடனே இருக்கும் என்பதால் கூலியை நிரந்தரமாக நிர்ணயிக்க முடியாது, மார்க்கெட் நிலவரத்தை பொறுத்தே கூலியை நிர்ணயம் செய்ய முடியும் என்று ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டனர்.

இதனால், பேச்சு வார்த்தை ஏமாற்றத்தில் முடிந்தது. விசைத்தறியாளர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். போராட்டத்தின் பேச்சு வார்த்தை தோல்வியை தழுவியதால் விசைத்தறியாளர் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் போராட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்கள், இதற்காக அவர்கள் பல்லடத்தில் சந்திக்க உள்ளனர்.