கோவிட்-19 தொற்று நோய் பரவுவதை தடுக்க கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

அச்சமயத்தில் நாட்டு மக்கள் அனைவரும் நிதி நெருக்கடியானது ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்காமல் இருப்பதற்கு மத்திய அரசு பல சலுகைகளை அறிவித்தது. 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய பொருளாதாரச் சலுகைகள் அறிவிக்கப்பட்டதுடன், வரி செலுத்துவது, வங்கிக் கடன் செலுத்துவதற்கு கால அவகாசங்கள் நீட்டிக்கப்பட்டது.

மேலும், வரி செலுத்தப்பட்டவருக்கு திரும்ப வர வேண்டிய ரீபண்ட் தொகையை வருமான வரித் துறையினர் வேகமாக வழங்கி வருகிறார்கள்.

எனவே, ஏப்ரல் 1-ம் தேதி முதல் அக்டோபர் 13-ம் தேதி வரை மொத்தம் 38.11 லட்சம் நபர்களுக்கு ரீபண்ட் தொகையான ரூ.1.23 லட்சம் கோடியை வழங்கி உள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியமானது தெரிவித்து உள்ளது.

மேலும், இதில் தனிநபர் வருமான வரி மொத்தம் 29.17 லட்சம் நபர்களுக்கு 33,442 கோடி ரூபாய் ரீபண்ட் வழங்கப்பட்டு உள்ளது. அதே போல், கார்பரேட் வரியின் கீழாக 1.89 லட்சம் பேருக்கு 90,032 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னதாக செப்டம்பர் மாதம் 15-ம் தேதி வரை மொத்தமாக 30.92 லட்சம் பேருக்கு ரீபண்ட் தொகை 1.06 கோடி ருபாய் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இவற்றில் தனிநபர் வருமான வரி மொத்தம், 29.17 லட்சம் பேருக்கு 31,741 கோடி ரூபாய் ரீபண்ட் வழங்கப்பட்டது.

அதே சமயம், கார்பரேட் வரியின் கீழாக 1.74 லட்சம் பேருக்கு 74,729 கோடி ரூபாயும் வழங்கப்பட்டிருந்தது. கோவிட்-19 பாதிப்பினை கருத்தில் கொண்டு தான் இந்த ரீபண்ட் தொகையானது விரைந்து வழங்கிக்கொண்டு இருப்பதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author – Gurusanjeev Sivakumar