ஸ்டார்ட் அப் மற்றும் டெக் நிறுவன பங்கு முதலீடுகள், முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றமா? லாபமா?

சென்ற ஆண்டில் பல புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், டெக் நிறுவனங்கள் ஆகியவை பங்கு சந்தைக்குள் நுழைந்தன. இவை சில்லறை முதலீட்டாளர்களிடம் ஆரம்ப கட்டத்தில் ஏற்படுத்திய தாக்கம் சிறப்பாகவே இருந்தது. ஆனால் பிறகு முதலீட்டாளர்கள் பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்று நிலவரம் கூறுகிறது. காரணம் இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து பல முதலீடுகள் வெளியேறி வருகின்றன. இதனால் சந்தை நிலவரம் தொடர்ந்து சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

எந்தெந்த நிறுவன பங்குகள் மேலும் வீழ்ச்சியை சந்திக்கலாம் – நிபுணர்கள் கருத்து

குறிப்பிட்ட சில டெக் நிறுவனங்கள் பொது பங்கு வெளியீட்டில் இருந்தே 50 சதவீதத்துக்கும் மேல் சரிவில் உள்ளன. அவற்றுள் சோமோட்டோ, பேடிஎம், பிபி பின்டெக்., நய்கா, பினோ பேமேண்ட்ஸ் பேங்க், கார்டிரேடு ஆகியவை அடங்கும். சோமோட்டோ நிறுவனப் பங்கின் போக்கு ஆரம்பகட்டத்தில் நல்ல நிலையில் இருந்தாலும் கூட பிறகு அதன் நிலவரம் மாறியுள்ளது. இந்த நிலைமை இன்னும் மாறி 80% லிருந்து 90% வரை வீழ்ச்சி அடையும் வாய்ப்பு அதிகம் உள்ளது என நிபுணர்கள் குழு கருத்து தெரிவித்துள்ளது.

இன்னும் ஒரு காரணம், பல நிறுவனங்களின் பங்கு விலை பிரீமியம் நிலையில் இருந்தன. இன்னும் சில நிறுவனங்கள் தாமே எதிர்பார்க்காத அளவு முதலீடுகள் வந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் குறிப்பிட்ட அந்த நிறுவனங்களின் வர்த்தக மாதிரிகள் தனித்தன்மையற்றவையாகவும் சற்றே சிந்திக்க வேண்டிய நிலையிலும் இருக்கின்றன என்றால் அது சரியான கருத்தே. இந்த ஒரு சில முக்கிய காரணங்களாலும் சில நிறுவன பங்குகள் மதிப்பு 20லிருந்து 50% வரை வீழ்ச்சியடைந்துள்ளது. இது இன்னும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

திங்கட்கிழமை பங்கு சந்தை நிலவரம்

வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை 24ம் தேதி ஆரம்பத்திலேயே பங்கு சந்தை நிலவரம் சரிவில் தொடங்கியது. இது நாள் முடியும் சமயத்திலும் ஏற்றம் பெறவில்லை என்றே சொல்லலாம். நாளின் இறுதியில் பங்கு சந்தை நிலவரம் – சென்செக்ஸ் 57491.51 புள்ளிகள் (1545.67 புள்ளிகளாக (அ) 2.63% வீழ்ச்சி கண்டிருந்தது). நிஃப்டி 17149.10 புள்ளிகள் (468.05 புள்ளிகள் (அ) 2.66% வீழ்ச்சி கண்டிருந்தது).