ரிலையன்ஸ் ரீடெயில் இந்தியாவை பொறுத்த வரையில் எவ்வித தடையுமின்றி ரீடெயில் வர்த்தகத்தில் வேரூன்றி கிளைகளை வேகமாகப் படரவிட்டு வருகிறது என்றே சொல்லலாம். பல பிரிவுகளிலும் இதன் ஆன்லைன் வர்த்தகம் தொடர்கிறது. இப்போது என்ன புதிதான விரிவாக்க திட்டம் என்றால் அழகு சாதன பொருட்கள். சமீபத்தில் அழகு சாதன பொருட்கள் ஆன்லைன் விற்பனையில் புதிய உச்சத்தை எட்டிய நைகா ரிலையன்ஸ் முகேஷ் அம்பானிக்கு புதிய சிந்தனையை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

இப்போதைக்கு காஸ்மெடிக்ஸ், ஃபேஷன் ஆகியவற்றில் பிரபலமாக இருப்பது நைகா மற்றும் மிந்த்ரா. இந்நிறுவனங்களுக்கு போட்டியாக தாமும் அழகு பொருட்கள் ஆன்லைன் வர்த்தகத்தை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ்.

இதற்குரிய நடவடிக்கைகள் அனைத்தும் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. விரைவில் ஈகாமர்ஸ் தளம் தயாராகிவிடும். ஏற்கனவே ரிலையன்ஸ் கைவசம் இருக்கும் நெட்மேட்ஸ், Fynd ஆகிய நிறுவனங்களின் ஈகாமர்ஸ் தளங்களின் frontend, கஸ்டமர் இன்டர்பேஸ், டேட்டா மேனேஜ்மென்ட் போன்ற பணிகளும் நடைபெற்று வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

ரிலையன்ஸ் தவிர்த்து இதுபோல் வர்த்தகத்தில் ஈடுபடும் பிற முன்னணி நிறுவனங்கள் என்னென்ன?

டாடா குழுமம் கூட இதே மாதிரி காஸ்மெட்டிக்ஸ் வர்த்தகத்தில் கால் பாதிக்க இருப்பதாக சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியானதை நாம் நினைவு கொள்வோம். அது சரி, முன்னணி நிறுவனங்கள் பலவும் இவ்வாறு பல்வேறு ஆன்லைன் வர்த்தகங்களிலும் தம் கிளைகளை படர விட காரணம் என்ன? எதிர்பார்த்தபடி தங்கள் நிறுவன வர்த்தகத்தை குறிப்பிட்ட அளவில் உயர்த்திவிட்டால் இனி வரும் காலங்களில் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் இரண்டிலும் தங்கள் ஆதிக்கமே முழுவதும் இருக்கும் என்ற எண்ணத்திலேயே அவர்கள் தங்கள் வர்த்தகத்தை அனைத்து துறைகளிலும் விரிவு செய்து வருகின்றனர்.