ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் 6 பேர் கொண்ட நாணய கொள்கைக் குழுவின் இருமான நாணய கொள்கை கூட்டம் முடிவடைந்துள்ளளது. இக்கூட்டத்தில் முக்கிய விவாதங்கள் நடைபெற்று பல முடிவுகள் அறிவிக்கப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி. அதில் ஒன்று வட்டி உயர்வு குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்.

உலக அளவில் கொரோனாவின் தாக்கம் பல நாடுகளிலும் அதிகரித்து வரும் சூழ்நிலையில், நம் நாட்டிலும்கூட பணவீக்க விகிதம் அதிகரித்து, விலைவாசி கட்டுக்கடங்காமல் ஏறிக்கொண்டே வருகிறது. இந்நிலையை சமாளிக்க வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்று பொதுவான கருத்தும் எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் ரெப்போ விகிதம் உட்பட எந்த வட்டி விகிதமும் மாற்றமின்றி அப்படியே தொடர்வதாக அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி. ஆகவே தொடர்ந்து 10வது முறையாக அதாவது 2020 மே மாதத்திற்கு பிறகு வட்டி விகிதம் மாறாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடரும் வட்டி விகித விவரங்கள்

ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழு தீர்மானத்திற்கு பிறகு வட்டி விகிதங்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள வகையில் தொடர்கின்றன.. ரெப்போ வட்டி விகிதம் 4%, ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35%, வங்கிகளுக்கான MSF விகிதம் 4.25% என மாற்றமின்றி தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சில்லறை பணவீக்கம்

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களிடம் “2021-22 நடப்பு நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 5.3%-ஆகவும், அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 4.5%-ஆக குறையும் என்றும்” கூறியுள்ளார்.

மேலும் 2023 நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் ஒவ்வொரு காலாண்டுக்கும் எவ்வளவு இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1-வது காலாண்டில் 4.9%, 2-வது காலாண்டில் 5%, 3-வது காலாண்டில் 4%, மற்றும் 4-வது காலாண்டில் 4.2% என இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.