2022-23-ம் ஆண்டின் யூனியன் பட்ஜெட்டில் புகையிலை பொருட்களான சிகரெட், பீடி மற்றும் புகையில்லா புகையிலை ஆகியவற்றின் மீதான காலால் வரியை அதிகரிக்குமாறு அரசை வலியுறுத்துகின்றனர் பொது சுகாதார குழுக்கள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் மருத்துவர்கள். இதன் மூலம் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் கணக்கிட்டு கூறுகின்றனர்.

இந்த முன்மொழிவின் மூலம் தற்போது பீதியளித்து வரும் கோவிட் மற்றும் அது தொடர்புடைய தொற்று நோய்களை குறைக்கவும் முடியும், அதே சமயம் அரசுக்கு உடனடி வருவாய் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

முகோபாத்யாய் அவர்கள் கூறுகையில் “புகையிலை பொருட்கள் மீதான கலால் வரியை உயர்த்தும்போது அரசு கூடுதல் வருவாயை உடனடியாக பெறுகிறது. விலை ஏற்றத்தால் புகையிலை பொருட்கள் உபயோகிப்பது குறைய வாய்ப்புள்ளது, குறிப்பாக இளைஞர்கள். நாடு முழுவதும் உள்ள 268 மில்லியன்களுக்கு அதிகமான புகையிலை உபயோகிப்பாளர்கள் இதன் மூலம் அதன் உபயோகத்தை குறைக்க வேண்டிய தேவையை இந்த விலையேற்றம் ஏற்படுத்தும். குழந்தைகளும், இளைஞர்களும் இப்பழக்கத்தை துவங்குவதிலிருந்து தப்ப முடியும்.” என்று கூறுகிறார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் புகையிலை பொருட்களிலிருந்து கிடைக்கப்பெற்ற கலால் வரி

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த நிதியமைச்சகம், 2018-19ம் ஆண்டில் புகையிலை பொருட்களின் மீது வசூலிக்கப்பட்ட கலால் மற்றும் செஸ் வரி ரூ.1234 கோடி, 2019-20ம் ஆண்டில் அது ரூ.1610 கோடியாகவும், 2020-21-ல் ரூ.4962 கோடியாகவும் இருந்தது என்று கூறியது.

புகையிலை பொருட்கள் மூலம் வசூல் செய்யப்படும் வரிகள், பிற ஆதாரங்களிலிருந்து வசூலிக்கப்படுவது போன்றே இந்திய அரசின் ஒட்டுமொத்த வரி வருவாயின் ஒரு பகுதியாக இருக்கும். அது அரசு அறிவிக்கும் திட்டங்கள் யாவற்றிற்கும் பயன்படுத்தப்படும்.

சிகரெட்டுகளுக்கு சுமார் 52.7%மும், பீடிக்கு 22%மும், புகையில்லா புகையிலைக்கு 63.8%மும் மட்டுமே மொத்த வரிச்சுமையாக உள்ளது. இது உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்ததை விட (புகையிலை பொருட்களின் சில்லறை விலையின் குறைந்தது 75%) மிகவும் குறைவு என்று கூறுகிறார் ஜான்.

கலால் வரி விதிப்பு மாற்றம் வேண்டி உலக சுகாதார அமைப்பு கூறும் கருத்து

பல நிபுணர்களின் கருத்தை ஒத்தே உலக சுகாதார அமைப்பின் கருத்தும் உள்ளது. கலால் வரி உயர்வு புகையிலை பழக்கம் உள்ளவர்களை நிச்சயம் மாற்றும். அதிகமாக பயன்படுத்தக்கூடியவர்கள் அதை குறைப்பர், புதிய பயனாளிகள் உருவாவது தடுக்கப்படும், ஏற்கனவே சற்று குறைவாக உபயோகிப்பவர்கள் முழுவதும் இப்பழக்கத்திலிருந்து வெளியேறுவர், மொத்தத்தில் புகையிலை உபயோகிப்பதன் அளவு குறையும் என்று கூறுகிறது.

புகையிலை பழக்கத்தினால் நோய் தீவிரமடையும் – சான்றுகளுடன் விளக்கம்

கோவிட் தொற்றின் பாதிப்பை புகையிலை பழக்கம் இன்னும் அதிக சிக்கலாக்குகிறது என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. இப்பழக்கம் உள்ளவர்கள் கோவிட் தோற்றால் தாக்கப்படும்போது அவர்கள் உயிரிழக்கும் அபாயம் அதிகரிக்கிறது. ஆகவே கலால் வரியை உயர்த்த வேண்டும் என்ற கருத்து வெறும் வருவாய் ஈட்டும் விஷயமாக இல்லாமல் பல இன்னுயிர்களை காக்கவும் தொற்றுநோய் பாதிக்கும்போது நோயாளிகளை மேலும் பல சிக்கல்களிலிருந்து காக்க எடுக்கும் முயற்சியாகவே காண வேண்டும். புகையிலை பயன்பாட்டை இந்த முடிவு வெகுவாக குறைக்கும், என்று கூறுகிறார் டாடா மெமோரியல் மருத்துவமனை தலை மற்றும் கழுத்து புற்றுநோய் அறுவைசிகிச்சை நிபுணர் பங்கஜ் சதுர்வேதி.

உலகளவில் புகையிலை உபயோகிப்பவர் அதிகம் உள்ள நாடாக இந்தியா உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 13 லட்சம் பேர் புகையிலை பழக்கத்தால் அது தொடர்புடைய நோய்களினால் இறக்கின்றனர். மேலும் நம் நாட்டில் 27% புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் புகையிலை பழக்கம் உடையவர்களே என்று டாக்டர் பங்கஜ் கூறுகிறார்.