கிரிப்டோகரன்சி முதலீடு தடுக்க முடியாதது ஆகிவிட்ட சூழ்நிலையில் பிரபலமான கிரிப்டோகரன்சி என்ற இடத்தில் முதல் இடம் பெறுவது பிட்காயின். அது மட்டுமல்லாமல் எத்தேரியம், டெதர், கார்டனோ, இ.டி.எச்., மேட்டிக், எல்டிசி, டாட், சோல் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இந்த காயின்களில் முதலீடு செய்பவர்கள் சற்றே அதிக லாபத்தை காண்கின்றனர். இதுவரையில் எந்தவித சட்ட விதிகளும் இல்லாமலே கிரிப்டோகரன்சி நடைமுறையில் இருந்து வருகிறது என்பது முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்.

இந்நிலையில் இந்தியாவில் கிரிப்டோகரன்சிக்கு எதிராக களத்தில் இறங்கவிருப்பது டிஜிட்டல் கரன்சி. இதனை இந்த ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்யும். அதுமட்டுமல்லாது அது பாதுகாப்பான முறையிலும் சில சட்டவரைமுறைகளை பின்பற்றியும் இருக்கும். இந்த டிஜிட்டல் கரன்சிக்கென சில விதிமுறைகள் வகுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறும்போது “டிஜிட்டல் கரன்சி மிகவும் திறமையான மற்றும் மலிவான நாணய மேலாண்மை அமைப்புக்கு வழிவகுக்கும். எனவே அடுத்த நிதியாண்டில் ரிசர்வ் வங்கியால் பிளாக்செயின் தொழில் நுட்ப அடிப்படையில் டிஜிட்டல் கரன்சி வெளியிட முன்மொழியப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கிரிப்டோ கரன்சியை பெறப்படும் வருமானத்திற்கு 30% வரியும் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக கிரிப்டோகரன்சிகள் விதிமுறைகள் இல்லாதவை, அவற்றிற்கு எந்த வித நெறிமுறைகளும் வகுக்கப்படாததால் தனியார் கிரிப்டோ முதலீட்டாளர்கள் முழுக்க முழுக்க சொந்த ரிஸ்கில் தான் முதலீடு செய்கிறார்கள். அந்த முதலீடு அவர்களுக்கு லாபம் அளிக்குமா, இழப்பை கொடுக்குமா என்ற எந்த விஷயத்திற்கும் உத்தரவாதமும் கிடையாது மத்திய அரசும் இதில் பொறுப்பேற்காது என மத்திய நிதித்துறை செயலாளர் டி.வி.சோமநாதன் கூறியுள்ளார்.

இப்போது வெளியாகியுள்ள ரிசர்வ் வங்கியின் பண நிதி கொள்கையில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இது தொடர்பாக சில கருத்துக்களை முன்வைத்துள்ளார். அதன்படி, நம் நாட்டில் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள் நம் நாட்டின் பொருளாதார நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமைந்து மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே இந்த கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்பவர்கள் அவர்கள் சொந்த ரிஸ்கில் தான் முதலீடு செய்து வருகின்றனர். கிரிப்டோ கரன்சி மூலம் எந்தவித சொத்தும் அவர்களுக்கு கிடைக்கப்போவதில்லை எனத்தெரிவித்துள்ளார்.