மக்களிடையே எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டின் மோகம் அதிகரித்து வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் இதற்கு பல விதங்களில் உதவி செய்து வருகிறது. கடன் வழங்குதல், சிறப்பு தள்ளுபடி, வரி சலுகை இப்படி பல சலுகைகள் மின்வாகன வாடிக்கையாளர்களை கவரும் விதங்களில் செய்யப்படுகிறது. பல முன்னணி இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன உற்பத்தியாளர்களும் மின்வாகனங்களை உற்பத்தி செய்வதில் இறங்கியுள்ளனர்.

மின்வாகனங்களை அதிகம் பயன்படுத்துவதால் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள் தேவை குறைக்கப்படும். அதே போல் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். மின்வாகன பயன்பாட்டாளர்கள் வசதிக்கு தமிழ்நாட்டில் 600க்கும் மேற்பட்ட இடங்களில் சார்ஜிங் மையம் அமைக்க தமிழக அரசு இப்போது தீவிரமாக திட்டமிட்டு வருகிறது என்று செய்தி வெளியாகியுள்ளது. பெட்ரோல் பங்குகளை போலவே இந்த சார்ஜிங் மையங்களும் முழு நேரமும் செயல்பட வசதி செய்யப்படும்.

பொது போக்குவரத்தில் மின்வாகன பயன்பாடுகள் அதிகம் ஏற்படுவதற்கு ஏதுவாக வங்கிகளும் கடன் வழங்கி வருகிறது. மேலும் வாகனங்களை வாடகைக்கு விடுவதற்கும் சலுகைகள் வழங்கப்படுகிறது. தற்போது வரை நாடு முழுவதும் 3 கோடிக்கும் மேல் மின்வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 30 ஆயிரம் வாகனங்கள் உள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இப்போது மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்ய ஒரு யூனிட்டுக்கு 15 ரூபாய் வரை வசூல் செய்யப்படுகிறது. இன்னும் சார்ஜிங் மையங்கள் அதிக அளவில் அமைந்தால் இந்த கட்டணம் குறையும் வாய்ப்புள்ளது. அதன்படி தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைகளில் 25 கி.மீ.க்கு ஒன்று என்ற விகிதத்தில், முக்கிய வணிக வளாகங்கள், தியேட்டர்கள் ஆகியவற்றில் சார்ஜிங் மையங்கள் அமைக்க முயற்சி எடுத்து வருகிறது.