மீண்டும் உருமாறிய கொரோனா, மெல்ல மெல்ல ஆங்காங்கே தலைதூக்கும் புதிய தொற்றுகள், தலைநகர் சென்னை மற்றும் இன்னும் பல மாவட்டங்களில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம் என்று தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. தமிழகத்தில் சுகாதாரத்துறை மீண்டும் முடுக்கி விடப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள் ஒரு வித அச்சத்தில் இருந்து வருகின்றன.

2019-ல் தோன்றிய கொரோனா நமக்கு பல பாடங்களை கற்று கொடுத்துள்ளது. லாக்டவுன் சமயத்தில் பலர் வேலையில்லாமல் இருந்தபோது புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பல உருவாகின. தமிழக தொழில் துறை தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க பற்பல உதவிகளை செய்துள்ளது. மாவட்டம் தோறும் இருக்கும் மாவட்ட தொழில் மையங்கள் வாயிலாக தொழில் முனைவோர்கள் பல உதவிகளை பெற முடியும். இந்த சமயத்தில் இது பற்றிய விபரங்கள் அளிப்பது பலருக்கு உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தில் இச்செய்தியை நாம் பகிர்ந்துள்ளோம்.

ஒவ்வொரு மாவட்ட தொழில் மையங்களும் குறிப்பிட்ட சில பணிகள் ஆற்ற வேண்டும் என்பது விதி. கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு முகாம், தொழில் முனைவோர்களுக்கு ஆலோசனை வழங்குதல், உத்யோக் ஆதார் மெமோரண்டம் பதிவு செய்தல், குடிசைத் தொழில் சான்று வழங்குதல், கைவினை தொழில் சான்று வழங்குதல், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மானியங்கள் வழங்குதல், மின்னாக்கி மானியம் வழங்குதல், குழுமத் தொழில் வளர்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் தொழில் நிறுவனங்களின் தேவைகளை கண்டறிந்து, தொழில் நிறுவனங்களுடன் இணைந்து ஒப்புதலுக்கு பரிந்துரைத்தல், ஒப்புதல் வழங்கப்பெற்ற திட்டங்களை நடைமுறைபடுத்துதல் போன்ற பல பணிகளை மாவட்ட தொழில் மையங்கள் அளித்து வருகின்றன.

மேலும் ஒருமுனை தீர்வுக்குழுவின் மூலம் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உரிமங்களை பெற்று தருகிறது. கல்வியறிவு பெற்று வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் (UYEGP) திட்டத்திற்கு பயனாளிகளை தேர்வு செய்து கடன் வசதி பெற்று தருகிறது. புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்திற்கு (NEEDS) பயனாளிகளை தெரிவு செய்து கடன் வசதி பெற்று தருகிறது. பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்திற்கு (PMEGP) பயனாளிகளை தேர்வு செய்து கடன் வசதி பெற்று தருகிறது. நலிவடைந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் புனரமைப்புக்கு உதவி செய்கிறது.

சில தகுதிகளின் அடிப்படையில் இந்த திட்டத்தில் அனைவரும் இணைந்து பயனடையலாம்.

வயது வரம்பு : 18 வயதுக்கு குறையாமலும் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் இராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு வயது நரம்பு 45-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரரின் ஆண்டு குடும்ப வருமானம் ரூ.1-1/2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இதற்கான உரிய சான்றிதழை நோட்டரி பப்ளிக் / உறுதி மொழி ஆணையரிடம் இருந்து பெற வேண்டும்.

எவ்வளவு ரூபாய் தொழில் கடனாக பெற முடியும்?

உற்பத்தி நிறுவனங்களுக்கு அதிகபட்ச தொழில் கடன் ரூ.10 லட்சம்
சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.3 லட்சம்
வியாபாரத்திற்கு ரூ.1 லட்சம் வங்கிகள் மூலமாக மானியத்துடன் கடனாக வழங்கப்படும்.
நேரடி விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கடன் பெற இயலாது.

எவ்வாறு விண்ணப்பிப்பது?

இத்திட்டத்தில் இணைந்து பயன் பெற வேண்டுமானால் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பபடிவத்துடன் திட்ட அறிக்கை, விலைப்புள்ளி (GST Number கொண்டது). கல்வித் தகுதிச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் நகல், இருப்பிடச் சான்றிதழ் நகல், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளாக இருக்கும் பட்சத்தில் உரிய சான்றிதழுடன் விண்ணப்பித்தினை சமர்ப்பிக்க வேண்டும்.