தமிழ்நாட்டில் இரண்டு முக்கிய பருவங்களில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. அக்டோபர் 1 முதல் டிசம்பர் 15 வரை குறுவையிலும் டிசம்பர் 16 முதல் ஜூலை 31 வரை சம்பாவிலும். சம்பா 1973-ல் தொடங்கிய கொள்முதல் செயல்பாடு, அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பல்வேறு அமைப்புகளின் கீழ் ஏகபோக கொள்முதல், இணையான கொள்முதல், வரிவிதிப்பு முறை என்று செப்டம்பர் 2002 வரை தனித்தனியாக அல்லது சூழ்நிலைகளின் அடிப்படையில் கூட்டாகவோ தொடர்ந்தது.

நேரடி நெல் கொள்முதல் ஆன்லைன் நிலையங்கள்

தற்போது சம்பா பருவ நெல் அறுவடை பணிகள் தொடங்கியுள்ளதால், விவசாயிகள் அவர்களாகவே நெல் கொள்முதல் நிலையங்களை தேர்ந்தெடுத்து கொள்ளும் வசதியை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. ஆன்லைன் மூலம் கொள்முதல் நிலையங்களை விவசாயிகள் தேர்வு செய்து கொள்ளலாம்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு கொடுத்த செய்திகுறிப்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஹெச். கிருஷ்ணனுண்ணி கூறியிருப்பதாவது “தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் அந்தந்த மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு அவற்றின் மூலம் நெல் கொள்முதல் பணிகள் நடைபெறுகின்றன.

இதில் பதிவு செய்வதற்கு விவசாயிகள் எவ்வித சிரமமும் படத்தேவையில்லை. விவசாயிகள் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் தங்கள் பெயர், ஆதார் எண், வங்கி கணக்கு எண், ஆகிய விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துகொள்ளலாம். நெல் கொள்முதல் செய்யவேண்டிய தேதியையும் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த சம்பா பருவத்திற்கு 16ம் தேதி முதல் பதிவு செய்யப்படுகிறது. விவரம் பதிவு செய்யப்பட்ட பிறகு, கொடுக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் நெல் கொள்முதல் நிலையத்தின் பெயர், நாள், நேரம் ஆகிய அனைத்து விவரங்களும் அனுப்பி வைக்கப்படும். இத்திட்டம் நெல் பயிரிடும் விவசாயிகளின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பான திட்டம்.