எந்த வகையான மண் வகை மற்றும் கால நிலையிலும் ஏமாற்றம் கொடுக்காமல் விளைச்சல் தரக்கூடிய ரக நிலக்கடலை கதறி 1812 ரகம். இது ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியில் உள்ள விவசாய கல்லூரியில் கதறி என்கிற இடத்தில் உருவாக்கப்பட்ட ரகம்.

கதறி 1812 தோற்றமும் தன்மையும்

தோற்றத்தில் ஆங்கில எழுத்து ‘b’ வடிவத்தில் இருக்கும் இது சிறிய வகை ரோஸ் பருப்புகளை கொண்டது. இரண்டு பருப்புகளை கொண்ட இந்த ரகத்தில் அதன் நுனி கூர்மையாக இருக்கும் . 51% எண்ணெய் கொடுக்கக்கூடியது. ஒரு ஏக்கர் கடலையிலிருந்து சுமார் 500 கிலோ வரை எண்ணெய் பிழிந்து எடுக்க முடியும் . இந்தியாவில் இருக்கும் மற்ற எல்லா கடலை ரகங்களை காட்டிலும் இது மானாவாரியில் இரவையிலும் அதிகம் மகசூல் கொடுக்கிறது. மானாவாரியில் ஒரு ஏக்கருக்கு 1600 கிலோவுக்கு கூடுதலாகவும், இரவையில் 2200 கிலோ வரையிலும் மகசூல் கொடுக்கிறது.

பயிர் பாதுகாப்பு வழிகள்

ஒவ்வொரு 10 நாட்களுக்கு ஒரு முறை தரைவழி இடுபொருள் இட்டு, இலைவழி தெளிப்பு, தேமோர் கரைசல், பூச்சிக்கட்டுப்பாடு போன்ற சரியான பராமரிப்பு இருந்தால் இந்த ரக நிலக்கடலை கொடுக்கும் விளைச்சல் உண்மையிலேயே மிக அதிகம்.

உயர் விளைச்சல் கொடுக்கும் கதறி 1812 ரக நிலக்கடலை செயல்விளக்க தோட்டம் ஈரோட்டில்

இந்த கதறி 1812 ரக விதையை ஈரோடு பகுதியில் பருவத்தில் விநியோகம் செய்ய வேளாண் துறை ஏற்பாடு செய்துள்ளது என்று தெரிகிறது. இதற்கான செயல்விளக்க தோட்டமாக ஈரோடு அருகே வேட்டுவபாளையம் கிராம விவசாயி அப்புசாமி என்பவரது தோட்டம் உள்ளது. இத்தோட்டத்தை ஆய்வு செய்த ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சி.சின்னசாமி அவர்கள் கூறுகையில் “கூலியாட்கள் மூலம் விதைப்பு செய்யும்போது ஆட்கூலியாக அதிக அளவு செலவாகிறது, அதுவே விதைப்புக் கருவி மூலம் விதைப்பு செய்தால் செலவும் குறைகிறது, பயிரின் இடைவெளியை கூட்டவும், குறைக்கவும் முடிகிறது. எரிபொருள் செலவும் இல்லை” என்று தெரிவித்தார். அதிக விளைச்சல் தரக்கூடிய இந்த கதறி 1812 ரக தரமான விதைகள் விதைப்பண்ணை மூலம் உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.