பூச்சிக்கொல்லி மருந்து, பல நாட்களாய் கெட்டுப்போகாமல் இருக்க மருந்து உபயோகிக்கப்பட்ட காய்கறிகள் போன்ற அச்சுறுத்தும் விஷயங்களில் இருந்து விடுபட்டு “நம் ஆரோக்கியம், நம் கையில்” எனும் வகையில் பலரும் மாடித்தோட்டம் அமைக்கும் விஷயத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிலும் நகர வாழ் மக்களிடம் இதற்கு அமோக வரவேற்பு உள்ளது. எங்கு திரும்பினாலும் வீடுகளும், வெறுமையாய் இருக்கும் மொட்டை மாடிகளும் கண்ணுக்கு தெரியும் நகர்ப்புறங்களில் இப்போது பல இடங்களில் மாடித்தோட்டத்தை காண முடிகிறது. தன் வீட்டளவு காய்கறிகளை பயிரிட்டு புத்தம் புதிய காய்களை உணவுக்கு பயன்படுத்தி ஆனந்தம் கொள்கின்றனர். அதன் ருசியும் அருமை, பலனும் அபாரம் என்கின்றனர் பயனாளிகள்.

இந்த காய்கறி சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், மானிய விலையில் ‘கிட்’ வழங்கப்பட்டுவருகிறது. அதே போல் சொட்டு நீர் குழாய் அமைப்புகளையும் அரசு’ மானிய விலையில் வழங்குகிறது.

அருகாமையில் உள்ள மாவட்ட தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில், ஒருவர் ஆதார் அட்டை நகலை கொடுத்த காய்கறி விதைகள், இயற்கை உரம் ஆகிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். தேவைப்படின் அவர்களுக்கு மாடித்தோட்டம் அமைத்தல் மற்றும் பராமரித்தல் குறித்த விளக்கமும் அளிக்கப்படுகிறது. நேரில் வரமுடியாதவர்கள் இப்போது ஆன்லைன் வாயிலாகவும் இத்தொகுப்பை பெற முடியும்.

குறைந்த இடமா? கவலை வேண்டாம், இருக்கவே இருக்கு “செங்குத்தான தோட்டம்”

சென்னை நகர மக்கள் இதில் அதிக ஆர்வம் காட்டுவதால் சென்னை காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில், மாடித்தோட்டத்துக்கு இலவசமாகப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மாடித்தோட்டம் அமைப்பதற்கு 100 சதுர அடி இருந்தால்கூட போதும். ஒருவேளை இடவசதி குறைவாக இருந்தால், செங்குத்தான தோட்டங்களையும் அமைக்கலாம் என்கிறார் இணை பேராசிரியை விமலாராணி. திறந்த வெளி தோட்டம், நிழல் செட் தோட்டம், இரண்டும் சேர்ந்த தோட்டம் என 3 வகைகளாக தோட்டம் அமைத்து பராமரிக்கலாம் என்கிறார்.

இலவச பயிற்சி மற்றும் தொகுப்புகள் அனைத்தும் கிடைக்கும்

காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தின் சார்பில், மாடித்தோட்டம் அமைப்பதற்கான இலவச ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. மேலும் மாடித்தோட்டம் அமைப்பதற்கான தொகுப்புகள், மாடித்தோட்டத்துக்குத் தேவையான இயற்கை உரங்களும் விற்பனை செய்யப்படுகின்றன” என்று அவர் தெரிவித்தார்.