மத்திய அரசு வெளியிட்ட பட்ஜெட்டில் பல்வேறு விஷயங்கள் கருத்து ஈர்ப்புடன் இருக்கும்போது அதில் ஒன்றாக உள்ளது டிஜிட்டல் கரன்சி வெளியீடு. மத்திய அரசு தனது பட்ஜெட் உரையில் அறிவித்திருந்த ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கரன்சி, கிரிப்டோ கரன்சி வருவாய் மீது வரி போன்றவை கட்டாயம் அமலுக்கு வரும்.

இந்த டிஜிட்டல் கரன்சி பற்றி பல்வேறு கருத்துக்கள் மக்களிடையே பரவலாக இருந்து வருகிறது. ரிசர்வ் வங்கி வெளியிட இருக்கும் இந்த டிஜிட்டல் ரூபாய் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை நாமும் இங்கே தெரிந்துகொள்ளலாம்.

அடிப்படை வடிவம்

இந்த டிஜிட்டல் கரன்சி காகித வடிவில் இருக்காமல் டிஜிட்டல் நாணயமாக வெளியிடப்படும். மின்னணு வடிவத்தை தன் அமைப்பாக கொண்டிருக்கும் இந்த டிஜிட்டல் நாணயம் இந்திய அரசின் இறையாண்மை கொண்ட நாணயமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூபாயுடன் மாற்றத்தக்க, தங்கம் மற்றும் இன்னும் பலவற்றின் இருப்பை அடிப்படையாக கொண்டிருக்கும்.

தொழில்நுட்ப சிறப்பம்சம்

அரசின் மிகவும் பாதுகாக்கப்பட்ட பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமையப்பெறும் இந்த டிஜிட்டல் கரன்சி. இந்த பிளாக்செயின் நெட்ஒர்க் முழுவதும் அரசால் உருவாக்கப்பட்டு பாதுகாப்பான நெறிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்படும்படி அமையும்.

பிட்காயின் போன்ற நாணயத்திற்கும் புதிதாக வர இருக்கும் டிஜிட்டல் நாணயத்திற்கும் உள்ள வேறுபாடு

ஏற்கனவே சந்தையில் இருக்கும் பிட்காயின் போன்ற கிரிப்டோ நாணயங்களும் மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட இருக்கும் டிஜிட்டல் நாணயத்திற்கு என்ன வித்தியாசம் என்றால் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் டிஜிட்டல் நாணயம் முழுக்க முழுக்க அரசின் ஆதரவுடன், பாதுகாக்கப்பட்ட பிளாக்செயின் தொழில்நுட்ப அடிப்படையில், எளிதில் கையாளக்கூடிய மின்னணு வடிவிலும், தற்போது நடைமுறையில் இருக்கும் பிட்காயின் போன்ற நாணயத்திற்கும் இதற்கும் மதிப்பில் பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இல்லாதபடியும் அமையும் என்று செய்திகள் வந்துள்ளன.

எளிமை மற்றும் வசதிகள்

நிகழ்நேர பணப்பரிவர்தனைகள் மிக எளிதாக மேற்கொள்ள வசதி கொண்டதாய் புதிய டிஜிட்டல் கரன்சி இருக்கும். உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் தனது பரிவர்த்தனையின் கரங்கள் நீளும். மானியங்கள், நிதி அமைப்புகள் வழங்கும் கடன்களில் விரைவு ஆகியவற்றிற்கு டிஜிட்டல் கரன்சி உதவும்.