பிளாஸ்டிக் சுற்றுச்சூழல் சீர்கேட்டை விளைவிக்க கூடியது என்பதால் உலகின் பல நாடுகளும் அதன் பயன்பாட்டை தவிர்க்க அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. இனிமேல் பிளாஸ்டிக் உற்பத்தி செய்வதை தவிர்க்கலாம், ஆனால் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக்கை முழுவதும் அழிப்பது சிரமம். அதையே மறுசுழற்சி செய்து புதிய பொருளாக உருவாக்க பல்வேறு அமைப்புகளும்,நிறுவனங்களும் முயற்சி செய்து புதிய பொருட்களை உருவாக்கி வருகின்றனர். இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு அரசும் ஒத்துழைப்பு அளிக்கிறது.

டி-சர்ட் ஆடை தயாரிக்கும் முயற்சி

இதன் ஒரு முயற்சியாக துபாய் நாட்டை சேர்ந்த டி-சர்ட் ஆடை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று பிளாஸ்டிக் கேன்களை உபயோகித்து ஆடைகளை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. பிளாஸ்டிக் கேன்களை மறுசுழற்சி முறையில் பஞ்சுபோல உருமாற்றி, அதனை கயிறுபோல திரித்து, பிளாஸ்டிக் உடைகளை அந்நிறுவனம் தயாரிப்பதாக தெரிகிறது.

மூலதன பொருட்செலவு குறைவு

பிளாஸ்டிக்கை பைபர் போல மாற்றி ஆடைகள் உற்பத்தி செய்யப்படுவதால் தயாரிப்புக்கு தேவைப்படும் மூலதன செலவு மிகக்குறைவு என்று அந்நிறுவன அதிகாரி தெரிவிக்கிறார்.

பிளாஸ்டிக் மறுசுழற்சி முறையில் ஆடைகள் தயாரிக்கும் போது 50 % உற்பத்தி திறன் சேமிக்கப்படுகிறது. தண்ணீர் 20 சதவீதம், கார்பன் 55% வெளியேற்றம் ஆகியவை கட்டுப்படுத்தப்படுகிறது.