கூகுள் நிறுவனம் டிஜிட்டைசேஷன் பண்ட் மூலம் இந்தியாவில் டிஜிட்டல் கட்டமைப்பை வலிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இம்முயற்சிக்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் அதிகபட்ச முதலீடும் செய்திருந்தது. இந்நிலையில் தற்போது ரிலையன்ஸின் போட்டி நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனத்திலும் சுமார் 1 பில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. இத்துடன் 300 மில்லியன் டாலர் தொகையை பல வருட ஒப்பந்தங்கள் மூலம் அளிக்க உள்ளதாகவும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம்.

ஏர்டெல் மற்றும் கூகுள் இணைவதால் டெலிகாம் சேவைகளில் ஏற்றம்

இந்த இரு முன்னணி நிறுவனங்களின் கூட்டணியால் இந்தியாவில் குறைந்த விலையில் செல்போன்கள் அறிமுகப்படுத்தப்படும். பல முக்கிய டெலிகாம் சேவை மற்றும் கிளவுட் சேவைகள் மேம்படும். டிஜிட்டல் வாடிக்கையாளர்கள் இன்னும் அதிக சேவைகளை பெற முடியும் என்பதால் வர்த்தகம் நிச்சயம் அதிகரிக்கும். இதே கண்ணோட்டத்தில் 2020-ம் ஆண்டு கூகுள் பேரண்ட் நிறுவனமான ஆல்பபெட், ஜியோ பிளாட்பார்மஸில் முதலீடு செய்த தொகை ரூபாய் 33,737 கோடிகள்.

கூகுளுக்கு எவ்வளவு பங்குகளை ஒதுக்கியுள்ளது பார்தி ஏர்டெல்

பார்தி ஏர்டெல் 5234.38 கோடி ரூபாய் மதிப்புள்ள 71,176,839 பங்குகளை கூகுள் இண்டர்நேஷனல் எல்எல்சி நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கூகுளின் இந்த அறிவிப்பால் பங்கு சந்தையில் பார்தி ஏர்டெல் நிறுவன பங்குகளின் மதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.