நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி மற்றும் பட்டு ரகங்கள் தரம் மற்றும் நேர்த்தியின் அடிப்படையில் மிகப்பிரபலமானவை. ஏறக்குறைய 3000 கைத்தறி கூடங்கள் இங்கு
உள்ளன. 50000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். பல ஊர்களிலிருந்தும் வாடிக்கையாளர்கள் இங்கு வந்து பல்வேறு விழா மற்றும் விசேஷங்களுக்கு தேவைப்படும் பட்டு ஜவுளி ரகங்களை கொள்முதல் செய்வர். மேலும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் காரணமாக நாளொன்றுக்கு ரூபாய் 5 கோடி ரூபாய் வரை இங்கு வர்த்தகம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், பட்டு ஜவுளி உற்பத்தி பொருட்கள் யாவும் கடும் விலையேற்றத்தை சந்தித்துள்ளதால் உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளி ரகங்கள் விற்பனைக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஜவுளிகளின் தேக்கம் அதிகரித்துள்ளது. உற்பத்தியாளர்களும் தொடர் இழப்பை சந்தித்து வருகின்றனர். இதனால் பிப் 7ம் தேதியிலிருந்து தொடர்ந்து 15 நாட்களுக்கு பட்டு ஜவுளி உற்பத்தியை நிறுத்தி வைப்பதாக பட்டு ஜவுளி உற்பத்தியாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த முடிவை ஒட்டி குமாரபாளையத்திலுள்ள பட்டு ஜவுளி உற்பத்தி கூடங்கள் எதுவும் செயல்படவில்லை. இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

பட்டு உற்பத்தி பொருட்கள் விலை உயர்வு விவரம்

குமாரபாளையம் கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் நாகராஜன் அவர்கள் இதுபற்றி கூறும்போது, ”கிலோ ஒன்றுக்கு 3000 ரூபாய் என்று விற்பனை செய்யப்பட்டு வந்த பட்டு இப்போது 6500 ரூபாய் என விலை உயர்ந்துள்ளது. ஜரிகை விலை ஒரு மார் 350 ரூபாயிலிருந்து 750 ஆகவும், வார்ப்பு பட்டு விலை கிலோ ஒன்றுக்கு ரூபாய் 4,500-லிருந்து 7 ஆயிரமாகவும் உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றத்தால் ஆர்டர் எடுத்த விலையை காட்டிலும் உற்பத்திக்கு ஆகும் செலவு அதிகரிக்கிறது. விளைவு நஷ்டத்திற்கு விற்பனை செய்ய வேண்டிய சூழல் அல்லது ஜவுளி ரகங்களை ஒப்புக்கொண்ட விலைக்கு விற்க முடியாத நிலை ஏற்படுகிறது. இன்னும் இரண்டு மாதங்கள் முகூர்த்தங்கள், திருவிழாக்கள் அதிகம் இருக்கும். இந்த சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள இந்த வேலை நிறுத்தம் இத்தொழிலை கேள்விக்குறியாக்கி உள்ளது.

நேரடி மற்றும் சார்பு நிறுவனங்களின் தொழில் பாதிப்பு

இதனால் நேரடியாக இந்த தொழிலில் உள்ளவர் மற்றும் சார்புடைய தொழில் செய்பவர்கள் அதாவது கைத்தறி மற்றும் சாய தொழில், அட்டை அடிப்பவர், இதர சார்பு நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள தொழிலாளர்களும்
பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே விரைவில் மாநில மற்றும் மத்திய அரசு இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.” என்று அவர் கூறியுள்ளார்.