இந்திய மாநிலங்களிலேயே பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் என்ற அந்தஸ்து பெற்றதில் 2வது இடத்தில் உள்ளது தமிழகம். உள்நாட்டு உற்பத்தியில் 9.84% பங்களிப்பை நாம் வழங்குகிறோம். தொழில் துறையில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றி காட்டி புதிய முதலீடுகளை ஈர்ப்பது, லட்சோப லட்சம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பது போன்ற இலக்குகளை வைத்து செயல்பட்டு வருகிறது தமிழக அரசு.

100 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், தயார் நிலையில் 3க்கும் மேல் உற்பத்தி நிறுவனங்கள்

தொழில்துறை அதிகாரிகள் பலரும் நேர்மறையான கருத்துகளையே கூறுகின்றனர். 2021-22 நிதியாண்டில் கடந்த 9 மாதங்களில் பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வந்துள்ளனர். 100 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உற்பத்தி நிறுவனங்களுடன் செய்யப்பட்டுள்ளன. இன்னும் பல நிறுவனங்கள் இங்கு தொழில் துவங்க அனுமதி கேட்டு காத்து இருக்கின்றனர். அவர்கள் விண்ணப்பமும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. அனுமதிக்கப்பட்ட நிறுவனங்கள் பல நிலம் வாங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இன்னும் சில நிறுவனங்கள் தமக்கு ஏற்ற நிலங்களை தேடிக்கொண்டுள்ளனர். 3க்கும் மேல் நிறுவனங்கள் ஆயத்த பணிகள் முடிவடைந்து உற்பத்தியை ஆரம்பிக்க தயாராக உள்ளனர். இவ்வாறு தமிழகத்தில் தொழில்துறை சிறப்பாக வளர்ச்சி பெற்று வருகிறது. இந்த 9 மாதங்களில் பல்வேறு நிறுவனங்களும் நம் மாநிலத்தில் செய்யப்பட்டிருக்கும் முதலீடு 55000 கோடி ரூபாய் வரை ஆகும். இதனால் ஏறக்குறைய 1 லட்சத்து 65 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.

2030-ல் தமிழகத்தின் இலக்கு

2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் 23 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய நிறுவனங்களை கவனப்படுத்துவது மற்றும் 46 லட்சத்திற்கும் மேல் வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருவது போன்ற இலக்குகளை வைத்து பணியாற்றி வருகிறது தமிழக அரசு. அதற்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் கவனம் வைத்துள்ளது இந்த அரசு.