பின்னலாடைக்கு பெயர் பெற்றது திருப்பூர் மாநகரம். திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் மிகப்பிரபலம். திருப்பூரில் பின்னலாடை மற்றும் அதை சார்ந்த பல ஆயிரம் நிறுவனங்களும் லட்சக்கணக்கான பணியாளர்களும் தங்கள் வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொண்டுள்ளனர். நூல் விலை உயர்வு, பஞ்சு விலையேற்றம் என இவர்களுக்கு எப்போதுமே சிக்கல் தரக்கூடிய பல விஷயங்கள் இருந்து கொண்டே தான் இருக்கின்றன.

பின்னலாடைக்கு மூலப்பொருளான நூல் விலை கடந்த நவம்பர் மாதம் கிலோவுக்கு ரூ.50 வரை அதிகரித்தது. இதனால் இந்த தொழிலை நம்பியுள்ள பல நிறுவனங்கள் அதாவது பிரின்டிங், பேக்கிங், எம்ப்ராய்டரிங், காம்பேக்ட்டிங், ரைசிங், ஸ்டிச்சிங் என அனைத்து துறையினரும் பாதிப்படைந்தனர். இதனால் பல எதிர்ப்புகள் கிளம்பி பின்னர் கிலோவுக்கு ரூ.10 குறைக்கப்பட்டது. ஆனால் மறுபடியும் இம்மாதம் கிலோவுக்கு ரூ.30 அதிகரித்துள்ளது.

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் ராஜா எம்.சண்முகம் அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது கூறியதாவது “பஞ்சு இறக்குமதிக்கு மத்திய அரசு 11% வரி விதித்துள்ளதை காரணம் காட்டி நூற்பாலை உரிமையாளர்கள் நூல் விலையை உயர்த்தி உள்ளனர். இதனால் தொழில் துறையினர் அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை காரணம் காட்டி இத்தொழில் முடங்கினாள் இதையே வாழ்வாதாரமாக கொண்டுள்ள பல தொழிலாளிகளின் வாழ்க்கையும் கூடவே முடங்கிப்போகும்.

பின்னலாடைக்கு மூலப்பொருளான பஞ்சு விலை ஏறியுள்ளதால் நமது நேரடி தொழில் போட்டியாளர்களாக சீன, வங்கதேசம் ஆகியவை நம்மிடம் பஞ்சு வாங்கி அவர்கள் விற்பனையை பெருக்கி கொண்டுள்ளனர். இது இன்னும் ஒரு தொழில் அபாயம்.”

ஆகவே பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த இருபதாயிரத்திற்கு மேற்பட்ட நிறுவனங்கள் இணைந்து இம்மாதம் 17, 18 ஆகிய 2 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருக்கின்றன. இதனால் ரூ.400 கோடிக்கும் மேல் உற்பத்தி பாதிக்கப்படும் என்று தெரிகிறது.