நெகிழி பைகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வருவதால் அவற்றை தடை செய்ய பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மஞ்சப்பை என்பது கௌரவக்குறைச்சல் கிடையாது என்கிற கருத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட ஆவன செய்ய வேண்டும் என்று அதிகாரிகளையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தை பொறுத்த வரையில் பின்னலாடை என்றாலே பிரபலமான திருப்பூர் நகரம் தான் நினைவுக்கு வரும். கொரோனா காலத்தில் பல தொழில் அமைப்புகள் நிலைகுலைந்து போனாலும், திருப்பூரில் மட்டும் முககவசம் உட்பட பலர் கொரோனா காப்பு ஆடைகளை தயாரித்து அசத்தி வந்தனர். அதே போல் இப்போது மஞ்சப்பை இயக்கத்தின் தேவைக்கும் பல மாவட்டங்களில் இருந்தும் மஞ்சள் கலர் ‘டி -சர்ட்’ உற்பத்திக்கு ஆர்டர் வருகிறது என்று கூறுகின்றனர் அந்நகர தொழில்துறையினர்.

இங்கு உள்ள பனியன் நிறுவனங்கள் பலவும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு தேவைக்கும் ஆடைகள் தயாரித்து விற்பனை செய்கின்றனர். அவர்கள் இப்போது மஞ்சள் கலர் ‘டி -சர்ட்’ தயாரிக்கின்றனர். இதன் மூலம் அரசு திட்டத்தை மக்களிடம் கொண்டு செல்ல முடிகிறது என்று கூறுகின்றனர் பனியன் உற்பத்தியாளர்கள். தமிழக அரசு வழங்கவிருக்கும் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கவும் மஞ்சப்பை உபயோகிக்க அரசு உத்தேசித்துள்ளது என்று தெரிகிறது. இப்போது தமிழக அமைச்சர்களும் இத்திட்டத்தில் பங்கேற்று பணியாற்றுகின்றனர்.

இதே பைகளை ‘காடா’ துணியில் தயாரிக்க வேண்டுமெனில் ஈரோடு, திருப்பூர், கோயம்பத்தூர் ஆகிய மாவட்டங்களை பயன்பெறும்.