நம் திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் ஆடை ரகங்கள் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். அவ்வாறு ஏற்றுமதி செய்யும் ஆடைகள் பொதுவாக கன்டெய்னரில் கடல் வழி மார்க்கமாக அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும். இந்நிலையில் அடுத்த 5 மாதங்களுக்கு கன்டெய்னர் தட்டுப்படும், கட்டண உயர்வும் இருக்கும் என்று கூறப்படுவதால் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கவலையில் உள்ளனர்.

ஏன் இந்த திடீர் தட்டுப்பாடு, கட்டண உயர்வு?

பேண்டமிக் காலத்திற்கு பிறகு பல்வேறு துறைமுகங்களில் சரக்குகளை தேக்கிவைக்கவும், அனுப்பவும் பல விதங்களில் தாமதம் ஏற்படுகிறது. இதன் காரணமாக கன்டெய்னர் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், சரக்கு கப்பல் போக்குவரத்து கட்டணமும் அதிகரித்துள்ளது.

தீராத கொரோனா, தொடரும் கன்டெய்னர் பற்றாக்குறை – தவிப்பில் உற்பத்தியாளர்கள்

இதோ இத்துடன் தீரும், இனி வருவதோடு முடிந்துவிடும் என்றெல்லாம் நம்பிக்கை வைத்திருந்தது பொய் கொரோனா ஒரு தொடரும் பிரச்சனையாகவே உள்ளது. அவ்வப்போது கிளம்பும் புதிய வகை வைரஸ்கள், அதனால் தொழில் துறையில் ஏற்படும் இன்னல்கள், லாக்டவுன், இவற்றினாலெல்லாம் வாடிக்கையாளர்களுக்கு உரிய காலத்தில் சரக்குகளை அனுப்பி வைக்க முடியாமை, போக்குவரத்து கட்டணம் உயர்வு ஆகிய விஷயங்கள் 2 ஆண்டுகளாகவே தொடர் சோகமாக உள்ளது. இதே நிலை தான் இந்த ஆண்டும் தொடரும் நிலை உள்ளது.

திருப்பூர் பின்னலாடை துறை ஆலோசகர் சபரிகிரீஷ் அவர்கள் இந்த கட்டண உயர்வு மற்றும் சரக்கு தேக்கம் ஆகியவற்றை பற்றி கூறும்போது “கொரோனாவுக்குப் பின், சரக்கு ஏற்றி செல்லும் கன்டெய்னர் கட்டணங்கள் எக்கச்சக்கமாக ஏறியுள்ளன. பல நாடுகளிலும் கொரோனா மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 80க்கும் மேல் சரக்கு கப்பல்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தொழிலாளர் பற்றாக்குறை எல்லா துறைமுகங்களிலும் இருந்து வருகிறது.

சீனாவில் புத்தாண்டு நெருங்குவதால் அங்குள்ள பணியாளர்களுக்கு 15 நாட்களுக்கும் மேல் விடுமுறை அளிக்கப்படும். இந்நிலையில் சரக்கு இறக்குதல் மற்றும் கன்டெய்னர்கள் திரும்பி வருதல் ஆகியவற்றில் தாமதம் ஏற்படும். இவையெல்லாம் சரியாக ஜூன் மாதத்திற்கு மேல் ஆகிவிடும் என்று தெரிகிறது. ஒரு வேலை அதற்கு மேல் கன்டெய்னர் கட்டணம் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நூல் விலை உயர்வு, பட்டன், ஜிப் போன்ற அக்சஸரீஸ் விலை உயர்வு இது போன்ற காரணங்களால் ஏற்கனவே உற்பத்தியாளர்கள் தவித்து வரும் சூழலில் இந்த பிரச்சனை அவர்களுக்கு கூடுதல் தலைவலியே. ஒரு வேலை குறித்த காலத்தில் பொருட்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று விமான சேவையை பயன்படுத்தினால் கூடுதல் கட்டணமே ஆகும்.” என்றும் அவர் கூறியுள்ளார். கூடிய விரைவில் இந்நிலை யாவும் சரியாகி தொழில்துறை மீண்டெழ வேண்டும் என்பதே எல்லோருடைய ஆசை.