தமிழ்நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி ஆலை அமைக்க ரூ.2500 கோடி முதலீடு செய்ய முன்வந்துள்ளது சிம்பிள் எனர்ஜி நிறுவனம். வரும் ஐந்து ஆண்டுகளில் இந்த முதலீட்டை செய்யவிருப்பதாக டிசம்பர் 8ம் தேதி, புதன் கிழமை இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதிநவீன தொழிற்சாலை எப்போது செயல்படும்?

சிம்பிள் எனர்ஜி நிறுவனர் ராஜ்குமாரிடம் பேசும்போது அவர் “தற்போது தமிழகத்தில் ஓசூர் அருகே சூலகிரியில், எலக்ட்ரிக் வாகனத் தொழிற்சாலையை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இது 2 லட்சம் ச.அ. பரப்பளவு கொண்டது. இங்கு முதல் கட்டமாக 10 லட்சம் இரு சக்கர எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கப்படும்.அடுத்த ஆண்டிலிருந்து இத்தொழிற்சாலையில் உற்பத்தி துவங்கும்.

அதைத் தொடர்ந்து 2-ம் கட்டமாக தர்மபுரி மாவட்டத்தில் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை தயாரிக்க உள்ளோம். இதுவும் சுமார் 600 ஏக்கரில் மிகப்பிரம்மாண்டமாக அமையும். இதற்காக, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். இந்த தொழிற்சாலை இயக்கம் 2023ம் ஆண்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார்.

தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்தில் ஒரு மிகப்பெரிய அதிநவீன எலக்ட்ரிக் இருசக்கர வாகன தொழிற்சாலை அமைப்பதற்கு ரூ.2500 கோடி முதலீடு செய்ய உள்ளதாக தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சமீபத்தில் கையெழுத்திட்டுள்ளது சிம்பிள் எனர்ஜி நிறுவனம்.