உலகளவில் எலக்ட்ரிக் கார் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக இருந்து வரும் எலன் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவிலும் தனது உற்பத்தி கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் கார்கள் சீனா உட்பட பல வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இவ்வாறு இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு மத்திய அரசு இறக்குமதி வரி விதித்து வருகிறது. இந்த இறக்குமதி வரியை குறைக்க வேண்டி மத்திய அரசிடம் டெஸ்லா நிறுவனம் கோரிக்கை வைத்து வருகிறது.

இந்த கோரிக்கை தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் விவாதம் எழுந்த போது அதற்கு பதில் அளித்த மத்திய கனரக தொழில்துறை மந்திரி கிருஷ்ணன் பால் குர்ஜர் “டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார் உற்பத்தி சீனாவில் நடைபெறுகிறது. அந்த கார்கள் தான் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. உற்பத்தி பணிகள் மற்றும் பணியாட்கள் அனைத்தையும் சீன நாட்டில் மேற்கொள்ளும் டெஸ்லா இந்திய சந்தையை தமது விற்பனைக்கு பயன்படுத்தி கொள்கிறது எனும்போது அது இறக்குமதி வரியை செலுத்த வேண்டும்.

மத்திய அரசின் கொள்கைப்படி இந்திய சந்தையை பயன்படுத்தப்படவேண்டுமானால் வேலை வாய்ப்புகள் இந்தியர்களுக்கு வழங்கப்படவேண்டும். ஆகவே மின்சார கார் உற்பத்தியை டெஸ்லா இந்தியாவில் தொடங்கும் வரை இறக்குமதி வரியில் எந்த சலுகையும் எதிர்பார்க்க முடியாது’ என்று கூறினார்.