விவசாயிகள் ஆற்றுப் பாசனத்தை மட்டும் நம்பி விவசாயம் செய்யும்போது அவ்வப்போது தண்ணீர் பற்றாக்குறை, மழை இல்லாமை போன்ற பல காரணங்களால் ஒருபோக சாகுபடி மட்டுமே எடுக்க இயலுகிறது. லாபமும் குறைவாகவே கிடைக்கிறது.

அதுவே கிணற்றுப்பாசனத்தில் சோலார் முறைக்கு மாறினால் நிச்சயம் இருபோக சாகுபடி எடுக்க முடியும். அதிக லாபமும் கிடைக்கும். என்னதான் கிணற்றில் தண்ணீர் இருந்தாலும் அதை டீசல் என்ஜின் மூலம் இறைக்கும்போது டீசல் செலவு, நீர் பாய்ச்ச கூலி என்று செலவு அதிகமாகிறது. இவற்றை சமாளிக்க விவசாயிகளுக்கு இருக்கும் மிகப்பெரிய ஆயுதம் சோலார் பம்ப் செட் அமைப்பதே.

சோலார் பம்ப்செட் 80% வரை மானியம் கிடைக்க வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மை பொறியியல் துறையில் சோலார் பம்ப்செட் அமைக்க 80% வரை மானியம் கிடைக்கிறது. சோலார் பம்ப்செட் என்பதால் மின் தேவை எதுவும் இல்லை. கிணற்றில் நீர் இருக்கும்போது மோட்டாரை இயக்கினால் தொடர்ந்து நீர் பாயும் எந்த வித தொந்தரவும் இல்லை, செலவும் இருக்காது.

ஒருங்கிணைந்த பண்ணையம், மண் வளம் பெற உதவும்

ஒவ்வொரு சாகுபடிக்கும் பயிர்களை மாற்றி பயிரிடுவது, சரியான விதத்தில் களையெடுத்தல், மீன் வளர்ப்பு, ஆடு, கோழி வளர்ப்பு போன்ற ஒருங்கிணைந்த பண்ணையம் செய்யும்போது சரியான விதத்தில் மண் வளம் பெரும் என்பதில் ஐயமில்லை.

தமிழ்நாடு விவசாய பட்ஜெட்டின்படி 5000 சோலார் பம்புசெட்கள்

புதிய அரசு பொறுப்பேற்ற பின் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விவசாய பட்ஜெட்டில் 5000 சோலார் பம்ப்செட்களை நிறுவ அரசு முன்மொழிந்தது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை வாசிக்கும் விவசாயிகள் யாராவது சோலார் பம்ப்செட்களை அவர்கள் நிலத்தில் அமைக்க விரும்பினார் தமிழ்நாடு வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.