முதலீட்டாளர்களின் ஈர்ப்புக்கு அதிகம் வாய்ப்பளிக்கும் மியூச்சுவல் பண்டு நிதி நிறுவனங்கள் தற்போது எலக்ட்ரிக் வாகனங்கள் துறையில் புதிய நிதி திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். அதன்படி புதிய நிதி திட்டங்களை அறிமுகம் செய்யவேண்டி தற்சமயம் வரையில் மூன்று மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் செபியிடம் விண்ணப்பம் அளித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

ஏன் இந்த புதிய அறிமுகம்?

எப்போதுமே நாட்டில் வளர்ச்சி இருக்கும் துறையை நோக்கிய கவன ஈர்ப்புடன் நிதி நிறுவனங்கள் செயல்படும். அவ்வாறு நோக்கின், தற்போது அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்களும் பெட்ரோல் டீசல் எரிபொருள் பயன்பாட்டுக்கு மாற்றாக எலக்ட்ரிக் வாகன உற்பத்தியை துவக்கி விட்டன. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத இந்த ரக வாகனங்கள் வாங்கும் மோகம் மக்களிடையேயும் அதிகரித்து வருகிறது. அரசும் இந்த துறையை ஊக்குவிக்கும் விதத்தில் பல உதவிகளை செய்து வருகிறது. எலக்ட்ரிக் வாகனம் வாங்குபவருக்கு மானியம் கிடைக்கிறது. ஆகவே எலக்ட்ரிக் வாகன துறை வரும் ஆண்டுகளில் மிகச்சிறந்த வளர்ச்சி பெரும் என்று முன்னோட்ட எண்ணத்துடன் மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் புதிய நிதி அறிமுகத்தில் களம் இறங்கியுள்ளன என்றே சொல்லலாம்.

முதலீட்டாளர்கள் கருத்தும், கவனமும்

பிரகாசமான வளர்ச்சியை எதிர்நோக்கி வரும் எலெக்ட்ரிக் வாகன துறை சார்ந்த நிதி திட்டங்களில் முதலீட்டாளர்கள் பலரும் ஆர்வமுடன் முதலீடு செய்வார்கள் என்றே பல நிதி நிறுவனங்களும் எதிர்பார்க்கின்றனர். இத்தகைய நிதி திட்டங்கள் ஈர்ப்புடையதாக இருந்தாலும் கூட நிதிகளின் தன்மை மற்றும் கிடைக்கும் ஆதாயம் போன்ற அனைத்து விஷயங்களையும் நன்கு ஆராய்ந்த பின்னர் முதலீட்டாளர்கள் முதலீட்டில் ஈடுபடுதல் அவசியம். அடிப்படை குறியீடு, இ.டி.எப்., அமைப்பை பரிசீலிப்பது போன்ற நடைமுறைகள் கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்யும். மொத்தத்தில் முதலீட்டாளர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுதல் நலம்.

ஆரம்பத்தில் மிகச்சிறிய தொகையை முதலீடு செய்யலாம். நிதியின் தன்மை, போக்கு ஆகியவற்றில் நல்ல பரிட்சயத்தை ஏற்படுத்தி கொள்ளுதல் அவசியம். எலக்ட்ரிக் வாகன துறையின் செயல்பாட்டை நன்கு உள்வாங்கி உரிய சமயங்களில் தேவைக்கேற்ப முடிவு எடுப்பது தேவையற்ற இழப்பு மற்றும் நஷ்டங்களிலிருந்து உங்களை காப்பாற்றும்.