பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுற்றுச்சூழல் மாசுபடுவது தவிர்ப்பு இப்படி பல காரணங்களுக்காக எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது. வேலைக்கு செல்லும் பெண்மணிகள், வயதானவர்கள் என்று பலரும் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசு எலக்ட்ரிக் சார்ஜிங் பாய்ண்ட்களை வேண்டுமானவரை நிறுவும் என்றும் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். இந்நிலையில் அப்படி எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குபவர்கள் சில வரிச்சலுகைகளையும் பெறலாம் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

நம் நாட்டில் தனி நபர் சொந்த தேவைக்காக வாங்கும் கார் ஆடம்பர பொருளாக கருதப்பட்டு அதற்கு வரி விலக்கு கொடுக்கப்படமாட்டாது. ஆனால் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்கினால் அவர்களுக்கு சில சலுகைகளை அரசு அறிவித்துள்ளது. 80EEB என்ற புதிய விதியை இந்திய அரசு அறிமுகம் செய்துள்ளதால் பல எலக்ட்ரிக் வாகன வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள். மேலும் இந்த வாகனங்கள் விற்பனையும் அதிகரிக்கும்.

சில விதிகளுக்குட்பட்டு இந்த வரிச்சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  • நடப்பு நிதியாண்டு 2020-2021 முதல், பிரிவு 80EEB இன் கீழ் வரிச் சலுகைகள் கிடைக்கும்.
  • தனி நபர் மட்டுமே இந்த வரிச் சலுகையை பெற முடியும்.
  • இந்த விலக்கு ஒவ்வொருவருக்கும் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். இதற்கு முன் மின்சார வாகனம் வைத்திருக்காத ஒருவர் மட்டுமே பிரிவு 80EEB கடன் வரிச் சலுகைக்கு தகுதியுடையவர்.
  • எலக்ட்ரிக் வாகனம் வாங்குவதற்கு தேவையான கடன் உதவியை ஒரு நிதி நிறுவனமோ அல்லது வங்கிசாரா நிதி நிறுவனமோ (NBFC) மட்டுமே வழங்க வேண்டும்.
  • ஏப்ரல் 1, 2019 முதல் மார்ச் 32, 2023 வரையிலான காலகட்டத்தில் இந்த பிரிவின் கீழ் வரி விலக்கு பெறலாம்.
  • நான்கு மற்றும் இருசக்கர எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இந்த வரி விலக்கு உண்டு.
  • எலெக்ட்ரிக் வாகன கடனில் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை விலக்கு கிடைக்கும்.

இது தவிர இன்னும் எண்ணற்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆகவே சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பெட்ரோல், டீசல் வாகனங்களை தவிர்த்து மக்கள் கொஞ்சம் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு முக்கியத்துவம் தருவதை ஆலோசித்தல் நலம்.