விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வீட்டில் இருந்தே இ-வாடகை செயலியில் பதிவு செய்வதன் மூலம் வேளாண் கருவிகளை விவசாயிகள் வாடகைக்கு எடுக்க முடியும். தமிழ்நாடு அரசு இ-வாடகைத் திட்டத்தை அறிமுகம் செய்து இன்றுடன் ஒரு மாதமாகிறது. இத்திட்டத்தில் இணைந்து பயன் பெறுவது எப்படி என்பது பற்றி இன்னும் பலருக்கு விவரம் தெரிவதில்லை. ஆகவே இங்கு பல விவரங்கள் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல் துறை மூலம் வேளாண் இயந்திரங்கள் யாவும் மிகக்குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு வழங்கப்படுகின்றன. இதனால் சொந்தமாக வேளாண் கருவிகள் வாங்கி உபயோகிக்க முடியாத சிறு குறு விவசாயிகள் பலர் பயன்பெறுவர். இ-வாடகை ஆன்லைன் செயலியை டவுன்லோட் செய்து அதில் கேட்கப்படும் விவரங்களை பதிவு செய்து விவசாயிகள் வீட்டில் இருந்தபடியே வேளாண் கருவிகளை வாடகைக்கு பதிவு செய்து கொள்ள வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வாங்க அரசு மானியம் அளிக்கிறது. தமிழ்நாடு வேளாண் பொறியியல் துறை சார்பில் வட்டார அளவில் வாடகை மையங்கள் அமைக்கப்படுகின்றன. முன்னோடி விவசாயிகள், விவசாய சங்கத்தினர், தொழில்முனைவோர் ஆகியவர்களை கொண்டு வேளாண் இயந்திர மையங்கள் அமைக்க நிதியுதவி அளிக்கப்படுகிறது.

இ-வாடகைத் திட்டத்தில் பதிவு செய்யும் முறை

‘உழவன்’ செயலியின் முகப்பு பக்கத்தில் உள்ள ‘வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு’ என்பதை தேர்வு செய்து ‘வேளாண் பொறியியல் துறை – இயந்திரங்கள் வாடகைக்கு’ என்பதை கிளிக் செய்து தொடரவும். பின் ‘முன்பதிவிற்கு’ என்பதை தேர்வு செய்தால் ‘வேளாண் இயந்திரங்கள் வாடகை விபரம்’ தொடுதிரையில் வரும். அதை க்ளிக் செய்தால் அங்கு சில விவரங்களை பதிவு செய்ய வேண்டி வரும் வேளாண் பணி தேவைப்படும் இடத்தின் மாவட்டம், வட்டம், வட்டாரம், கிராமம், முகவரி, நிலத்தின் புல எண், தேவைப்படும் தேதி, நேரம் ஆகிய விவரங்கள் கொடுக்க வேண்டும்.

இயந்திரங்களின் பட்டியல்

மேற்கண்ட பதிவுக்குப் பின் தேவைப்படும் இயந்திரங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இயந்திரங்கள் தேவைப்படும் கால அளவிற்கு ஏற்றபடியான கட்டண விவரங்கள் திரையில் வரும். அதில் வாடகையை தேர்ந்தெடுத்து பின் நிபந்தனைகளுக்கு ஒப்புதல் அளித்தபின் முன்பதிவை உறுதி செய்ய வேண்டும்.

கட்டணத்தை அவரவர் வசதிக்கு ஏற்றபடி நெட்பேங்கிங் அல்லது கிரெடிட் கார்டு மூலம் செலுத்தலாம். கட்டணம் செலுத்தப்பட்டவுடன் முன்பதிவிற்கான ஒப்புகைச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதுவே முன்பதிவு செய்யும் முறை. விவசாயிகள் தேர்வு செய்த நாளில் வேளாண் கருவிகள், இயந்திரங்கள் சரியான இடத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

கால அளவு மற்றும் கட்டணம்

புல்டோசர் மற்றும் ட்ரக் வகை மண் அள்ளும் இயந்திரங்கள் – கால அளவு : 8 மணி நேரத்திலிருந்து 30 மணி நேரம் வரை
டிராக்டர், மினி டிராக்டர் மற்றும் சக்கர வகை மண் அள்ளும் இயந்திரங்கள் – கால அளவு : 2 மணி நேரத்திலிருந்து 20 மணி நேரம் வரை.
வாகனத்துடன் கூடிய தேங்காய் பறிக்கும் இயந்திரம் – கால அளவு : 2 மணி நேரத்திலிருந்து 20 மணி நேரம் வரை.
டிரக் மற்றும் சக்கர வகை நெல் அறுவடை இயந்திரம் – கால அளவு : 1 மணி நேரத்திலிருந்து 20 மணி நேரம் வரை.

ஒவ்வொரு வகை இயந்திரத்திற்க்கும் தனியாக கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரூ.400-ல் ஆரம்பித்து ரூ.4,450/- வரை கட்டணம் உள்ளது.

சிறுபாசனத் திட்டக் கருவிகள்

சிறுபாசனத் திட்டக் கருவிகளையும் இந்த இ-வாடகை செயலி மூலம் பெறலாம். சுழல் விசைத்துளை கருவிகள், சிறு விசைத்துளை கருவிகள், கைத்துளை கருவிகள், பாறை வெடி கருவிகள், நிலத்தடி நீர் ஆய்வுக் கருவிகள், மின்னியல் ஆய்வுக் கருவிகள், பெர்குஷன் துளைக் கருவிகள் போன்ற பல்வேறு சிறுபாசன திட்ட கருவிகளும் வாடகைக்கு கிடைக்கும். கருவிகளுக்கு தகுந்தாற்போல் வாடகை கட்டணமும் வேறுபடும்.

இ-வாடகை செயலியை வரவேற்கும் விவசாயிகள்

விவசாயிகள் இந்த இ-வாடகை செயலி மூலம் அதிக அளவில் பயன்பெற முடிகிறது என்று கூறுவதாக தமிழ்நாடு வேளாண்மைத்துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இந்த செயலியில் தற்போது வரை 2548 விவசாயிகள் முன்பதிவு செய்துள்ளனர். இதனால் அரசு ஈட்டிய முன்பண வருவாய் ரூ.1.59 கோடி.

வேளாண்மை பணிகள் எதற்காகவும் தடைபடாமல் விரைந்து நடைபெற வேளாண் இயந்திரமயமாக்கல் இன்றியமையாத ஒன்று என்று அனைத்து தரப்பும் கருத்து தெரிவிக்கிறது. இந்நிலையில், தமிழக அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த ஆன்லைன் செயலி சிறு, குறு விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது என்று விவசாயிகள் பலரும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

கருவிகள் வாங்க மானியம் மற்றும் நிதி உதவி

வேளாண் இயந்திரங்களை சொந்தமாக வாங்கிடவும் அரசு மானியம் மற்றும் நிதிஉதவி அளிக்கிறது. 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள இயந்திரம் வாங்க அரசு 10 லட்ச ரூபாய் மானியம் வழங்குகிறது. விவசாயிகள் குழுவின் பங்களிப்பு நிதியாக 15 லட்சத்திலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கிராமங்களில் அமைக்கப்படும் குழுவிற்கு 10 லட்ச ரூபாய் வரை இயந்திரங்கள் வாங்க அனுமதிக்கப்படுகிறது. இதற்கு 8 லட்ச ரூபாய் அரசு மானியமும் 2 லட்ச ரூபாய் குழு பங்களிப்பு தொகையாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்போடு செயல்படுத்தும் இயந்திரங்கள், கருவிகள் வாங்கும் திட்டத்தில், ஆதி திராடவிடர்களுக்கு 50% மானியமும், இதர பிரிவினர்களுக்கு 40% மானியமும் அளிக்கப்படுகிறது. மத்திய அரசின் நிதியுதவியோடு நடைமுறைப்படுத்தப்படும் இயந்திரங்கள் வாங்கும் திட்டத்தில் பதிவு செய்வதற்கு agrimechinary.nic.in என்கிற இணைதளத்தை காண வேண்டும்.