சீன தயாரிப்பினை முற்றிலுமாக இந்திய வர்த்தகர்கள் புறக்கணித்ததன் காரணமாக, தீபாவளி விற்பனையில் சீன வர்த்தகர்களுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் இந்தியாவில் தீபாவளி விற்பனையானது 72 ஆயிரம் கோடி ரூபாயை தொட்டுள்ளதாக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு ஆனது தெரிவித்து உள்ளது.

கடந்த ஜூன் மாதம் 15 ஆம் தேதி லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன வீரர்களுக்கிடையே மிகப்பெரிய மோதல் நிகழ்ந்தது. அந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தார்கள். சீனாவின் தரப்பில் 40 முதல் 50 வீரர்கள் வரை உயிரிழந்தார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து இரு நாட்டுக்கும் இடையே போர் பதற்றம் உருவானது.

சீன தயாரிப்புகள்:

இதை கண்டிக்கும் வகையில், சீன தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு, தன்னுடைய உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டது. அதற்கேற்ப, சீன தயாரிப்புகள் வாங்குவதை இந்திய வர்த்தகர்கள் தவிர்த்து வருகின்றார்கள்.

கடந்த 15 ஆம் தேதி அன்று சிஏஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளி பண்டிகை சமயத்தில் முக்கிய 20 நகரங்களில் நடந்த வர்த்தகம் ஆனது 72 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். மேலும், சீன தயாரிப்புகளை புறக்கணித்ததால், சீன வர்த்தகர்களுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கோவிட்-19 ஊரடங்குக்கு பின்னர் வந்த பண்டிகையில் மிகச் சிறப்பான விற்பனை ஆனதால் இந்திய வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றும் வரும் காலங்களிலும் விற்பனையானது அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Author – Gurusanjeev Sivakumar