முன்பெல்லாம் எந்த பொருட்கள் எடுத்தாலும் அதில் சைனா மேக் நிச்சயம் இருக்கும். மலிவு விலை, பல மாடல்கள் என்று சைனா பொருட்கள் ஆக்கிரமிக்காத சந்தைகள் இல்லை எனலாம். அந்நிலை தற்போது மாறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய பொருட்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது என்றும் ‘மேட் இன் இந்தியா’ என லேபிள் உள்ள பொருட்களை வெளிநாட்டு மக்கள் அதிகம் விரும்புவதாகவும் DGFT அமைப்பு கருத்துக்கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய விவசாய பொருட்கள் முதல் FMCG பொருட்கள் வரை அனைத்துக்குமே அயல்நாடுகளில் வரவேற்பு அதிகமாக உள்ளது.

‘மேட் இன் தமிழ்நாடு’ பொருட்கள் அதிகம் உருவாக்கப்பட வேண்டும்

நம் தமிழகத்திலிருந்து கூட அதிகமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என முதல்வர் அவர்களும் கூறியிருந்தார். அதுவும் ‘மேட் இன் தமிழ்நாடு’ எனப்பெயர் சொல்லும்படியான பொருட்களாக அவை உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார். மேலும் ஏற்றுமதியாளர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்த தகவல்களை உறுதி செய்யும் விதமாக நடப்பு நிதியாண்டில் 301.08 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் முதல் 9 மாதங்களில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. 2021-22 இறுதியில் இந்த மதிப்பு 400 பில்லியன் டாலரை எட்டும் என்றும் கணித்துள்ளது இந்திய ஏற்றுமதி கழகம்.

இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பிரகாசமான வாய்ப்பு…சீன சந்தைக்கு செல்லாமல் வழிமாறும் ஆர்டர்கள்

முன்னணி ஏற்றுமதியாளர்களில் ஒருவர், பிரபல புளூபாரத் எக்ஸிம் நிறுவனத்தின் தலைவர் கே.எஸ்.கமாலுதீன் அவர்களிடம் ஏற்றுமதி பொருட்கள் வாய்ப்பு பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் கூறிய பதில் வருமாறு. “DGFT அமைப்பின் கருத்து கணிப்பு மிகவும் சரியே. தற்போதைய சூழ்நிலை இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு மிகவும் சாதகமாக உள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தரம், நம்பகத்தன்மை ஆகியவற்றின் காரணமாக உலக நாடுகள் மத்தியில் அவற்றிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சீனப் பொருட்களின் மீதான மவுசு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.

‘மேட் இன் இந்தியா’ எனப் பெயர் தாங்கிவரும் ஸ்டேஷனரீஸ், பேனா, பென்சில்களை வாங்க உலக மக்கள் பலரும் ஆசைப்படுகிறார்கள் என்பது தான் தற்போதைய சூழல். இந்த சூழலை தக்க வைத்து கொள்ளவும் இன்னும் வேறு பொருட்களுக்கான தேவை என்னவென்று தெரிந்து வர்த்தகத்தை பெருக்கவும் இந்திய ஏற்றுமதியாளர்கள் செயல்பட வேண்டும்” எனவும் அவர் கூறியிருந்தார்.