BSEல் சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகள் வரை தொட்டு, இந்தியாவில் 10 மாதங்களாகவே நன்கு முன்னேறி வந்த பங்கு சந்தையில் தற்போது இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைகிறது. உலக அளவில் உள்ள முதலீட்டாளர்கள் இந்திய பங்கு சந்தையில் முதலீடுகளை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இது இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம்.

பொருளாதார சவால்களை சந்திக்கும் கட்டாயத்தில் உலக நாடுகள்

கொரோனா பாண்டமிக் காலகட்டத்திலும் அதற்கு பின்னும் உலக நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்க பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து எடுத்துவருகின்றன. நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்து அனைத்து நாடுகளும் சற்று ஏற்றம் பெரும் இந்த தருவாயில் கொரோனாவின் அடுத்த வைப்ரன்ட்-ஆக வெளிவந்துள்ளது ஒமிக்ரான். இது சந்தையில் நிச்சயம் மீண்டும் பல பொருளாதார சவால்களை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

2020 ஜூலைக்கு நிகராக வீழ்ச்சியடைந்த இந்திய ரூபாயின் தற்போதய மதிப்பு

இந்திய பங்கு சந்தையில் உலக முதலீட்டாளர்களின் பங்கு விற்பனை வேகமெடுத்து வருவதால் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.75.63 என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு 2020 ஜூலை மாதத்தில் நிலவி வந்த சூழலுக்கு நிகராக உள்ளது இந்த மதிப்பு. ஒமிக்ரானுக்கு பிறகு இந்திய பங்கு சந்தையிலிருந்து வெளியேறிய முதலீட்டின் மதிப்பு சுமார் 4 பில்லியன் டாலர் என்று தெரிகிறது. விளைவு, ஆசியாவிலேயே மிக மோசமாக செயல்படும் நாணயம் என்ற நிலையில் உள்ளது இப்போது இந்திய ரூபாய். இச்சூழல் நிச்சயம் இந்தியாவில் பணவீக்கத்தை உருவாக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.