மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த மத்திய பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, மத்திய அரசு பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் பல சிறப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது என்று தெரிவித்தார். மேலும் பால் உற்பத்தியில் இந்தியா உலகளவில் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டில் மட்டும் 210 மில்லியன் டன் பால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்று தெரிகிறது. இதனால் அதிக பால் உற்பத்தி செய்த நாடாக இந்தியா முதலிடத்தில் உள்ளது.

2011-ம் ஆண்டு கணக்கெடுப்பு என்ன சொல்கிறது

உலக அளவில் மொத்தமாக 260 மில்லியன் கறவை பசுக்களிடம் இருந்து ஏறக்குறைய 730 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் நம் நாடு தான் அதிக பங்களிப்பு அளிக்கிறது. ஆம், இந்தியாவிலிருந்து மட்டும் 18.5% பால் உற்பத்தி செய்யப்படுகிறது.

தரவுகளின் அடிப்படையில் முடிவுற்ற மூன்று நிதியாண்டுகளில் 2018-2019, 2019-2020, 2020-2021 இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பால் விவரங்கள்

2018-2019-ல் உற்பத்தி செய்யப்பட்ட பால் 187.7 மில்லியன் டன், முந்தய ஆண்டை விட வளர்ச்சி விகிதம் 6.47%
2019-2020-ல் உற்பத்தி செய்யப்பட்ட பால் 198.4 மில்லியன் டன், முந்தய ஆண்டை விட வளர்ச்சி விகிதம் 5.69%
2020-2021-ல் உற்பத்தி செய்யப்பட்ட பால் 210 மில்லியன் டன், முந்தய ஆண்டை விட வளர்ச்சி விகிதம் 5.81%

குறிப்பிடத்தக்க விவரம் என்னவென்றால் கடந்த ஆண்டு 2020-21ல் தமிழ்நாட்டிலிருந்து மட்டும் 9790 டன் பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.