இந்தியாவில் உள்ள டாப் நிறுவனங்களை பற்றி ஆய்வு எடுப்பதில் ஈடுபட்டிருந்த பர்கண்டி நிறுவனம் தனது ஆய்வறிக்கையை சமீபத்தில் சமர்ப்பித்துள்ளது. ‘2021 பர்கண்டி பிரைவேட் ஹுருன் இந்தியா 500’ எனும் தலைப்பிடப்பட்ட அந்த ஆய்வறிக்கையில் இந்தியாவில் மிகவும் மதிப்புமிக்க, அரசு சாரா நிறுவனங்கள் 500-ன் பட்டியலை இந்த அறிக்கை கொண்டுள்ளது.

நிறுவனங்களை எவ்வாறு இந்நிறுவனம் பட்டியலிட்டது?

பர்கண்டி பிரைவேட், ஆக்சிஸ் வங்கியின் பிரைவேட் பேங்கிங் பிசினஸ் மற்றும் ஹுருன் இந்தியா ஆகியவற்றால் தொடங்கப்பட்ட இந்த அறிக்கை, பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கான சந்தை மூலதனம் மற்றும் பட்டியலிடப்படாத நிறுவனங்களின் மதிப்பீடுகள் என வரையறுக்கப்பட்ட நிறுவனங்களின் மதிப்பின்படி நிறுவனங்களை வரிசைப்படுத்துகிறது.

ஒட்டுமொத்த நிறுவனங்களின் நிகர மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இவ்வறிக்கையில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களின் மொத்த நிகர மதிப்பு ரூ.228 லட்சம் கோடி. அதில் தமிழகத்தை சேர்ந்த நிறுவனங்களின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.10 லட்சம் கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் இந்த 500 நிறுவனங்களில் 200 நிறுவனங்களின் நிகர மதிப்பு இவ்வாண்டில் இரண்டு மடங்காக கூடியுள்ளது. மேலும் இந்த அறிக்கையின் முதல் பதிப்பில் தமிழகத்தைச் சேர்ந்த மொத்தம் 44 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. கோவிட் தொற்று பரவலாக இருந்த போதிலும் கூட முன்னணியில் உள்ள பல நிறுவனங்களின் நிகர மதிப்பு 68% அதிகரித்துள்ளது. அதே சமயம் சிறு வணிகங்கள் கடுமையான பாதிப்பையே சந்தித்துள்ளன என்று தெரிகிறது.

இந்திய அளவில் முதல் மூன்று இடங்களில் உள்ள முன்னணி நிறுவனங்கள்

பட்டியிலில் உள்ள நிறுவனங்களில் முகேஷ் அம்பானி தலைமையிலான ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது மதிப்பு ரூ. 16.7 லட்சம் கோடி. ‘டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்’ நிறுவனம் 2-வது இடத்தில் ரூ. 13.1 லட்சம் கோடி மதிப்பிலும், ‘எச்.டி.எப்.சி. வங்கி’ 3-வது இடத்தில் ரூ.9.1 லட்சம் மதிப்பிலும் தொடர்கின்றன. சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங்களில், ‘சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா’ முதலிடம் பெற்றுள்ளது, இதன் மதிப்பு ரூ.1.8 லட்சம் கோடி. நடப்பு ஆண்டில் இதன் மதிப்பு 127% உயர்ந்துள்ளது.

தமிழக நிறுவனங்களில் முன்னணி வகிப்பவை – முதல் 5 இடங்கள்

இந்த அறிக்கையின்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனங்களின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.10 லட்சம் கோடி. இதில் முதல் இடம் பெறுவது “டைட்டன்”, அதன் மதிப்பு ரூ.2.18 லட்சம் கோடி, இரண்டாம் இடம் “ராம்சரண் & கோ” மதிப்பு ரூ.67,500 கோடி, மூன்றாவது “அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைஸ்”, மதிப்பு ரூ.59,498 கோடி. இவற்றை தொடர்ந்து சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஃபைனான்ஸ் நிறுவனம், அசோக் லேலண்ட், ஜோஹோ கார்ப்பரேஷன், எம்ஆர்எஃப், டிவிஎஸ் மோட்டார், ஹாட்சன் அக்ரோ புராடக்ட், டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா என பட்டியல் தொடர்கிறது.

பட்டியலிடப்படாத முதல் 3 இடங்களை பெற்ற நிறுவனங்களின் பெயர் வரிசை ராம்சரண் அண்ட் கோ-வில் துவங்குகிறது. தொடர்ந்து ஜோஹோ கார்ப்பரேஷன் மற்றும் அமல்கமேஷன்ஸ், ஃபைவ் ஸ்டார் பிசினஸ் ஃபைனான்ஸ் ஆகியவை உள்ளன.

தமிழ்நாட்டு நிறுவனங்களில் உள்ள பணியாளர்கள் எண்ணிக்கை

தமிழ்நாட்டை மையமாக கொண்டுள்ள நிறுவனங்கள் அனைத்தும் சேர்ந்து சராசரியாக 6908 பணியாளர்கள் என மொத்தம் 2.9 லட்சம் பணியாளர்களை பணியில் அமர்த்தியுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனங்களின் சராசரி வயது என்பது 52 வருடங்கள் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பர்கண்டி அறிக்கையில் சேர்க்கப்படாத நிறுவனங்கள்

பர்கண்டி சமர்ப்பித்ததுள்ள அறிக்கையில் இந்தியாவை தலைமையிடமாகக் கொண்ட நிறுவனங்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் துணை நிறுவனங்கள் பட்டியலில் இதில் சேர்க்கப்படவில்லை