பயனாளிகளின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் விவரங்களை பணப்பரிமாற்ற நிறுவனங்கள் மற்றும் முகமைகள் யாரும் இனிமேல் இணையதளங்களில் பதிவு செய்யக்கூடாது என்று இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த ஆணை வருகின்ற ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரவிருக்கிறது.

வர்த்தக நடவடிக்கைகளில் தற்சமயம் இருக்கும் நடைமுறை

வாடிக்கையாளர்கள் வணிக பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது அவர்களது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்கள் ஆகியவற்றை இணையதளத்தில் பதிவு செய்து கொள்வர். அடுத்தடுத்து வாடிக்கையாளர் பரிமாற்றம் செய்யும்போது அவர்களது வங்கி கார்டு விவரங்கள் தாமாகவே எடுத்துக்கொள்ளப்படும். இம்முறையே இப்போது அனைத்து வர்த்தக நிறுவனங்கள் மற்றும் முகமைகளால் கையாளப்பட்டுவருகின்றது.

வாடிக்கையாளருக்கு பாதுகாப்பற்ற சூழல் இருப்பதாக கருத்து

இந்நடவடிக்கை வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனையில் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதாக இந்திய ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதனை ஏற்றுக்கொண்ட ரிசர்வ் வங்கி இனிமேல் இத்தகைய பதிவுகள் இணையதளத்தில் மேற்கொள்ளக்கூடாது என்ற தடை விதித்து அதற்கான சுற்றறிக்கையை வெளியிட்டது.

அதன்படி வரும் 2022 ஜனவரி 1ம் தேதி முதல் இந்த ஆணை அமலுக்கு வர உள்ளது. ஆகவே இனிமேல் வாடிக்கையாளர் பணப்பரிமாற்றம் செய்யும்போதும் வர்த்தக நடவடிக்கை மேற்கொள்ளும்போதும் ஒவ்வொரு முறையும் தனது டெபிட், கிரெடிட் கார்டு என், காலாவதி தேதி, பெயர், cvv எண் மற்றும் ரகசிய குறியீட்டு என் போன்ற விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இதற்கு சில நிமிடங்கள் எடுத்துக்கொண்டாலும் பாதுகாப்பான நிலையை உறுதி செய்யும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.