பொள்ளாச்சி என்றாலே எல்லோர் நினைவுக்கும் வருவது தென்னை, வாழை. இந்த இரண்டும் இங்கு அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. காய்கறிகளும் பொள்ளாச்சியில் வளர்க்கப்படுகிறது. இப்பயிர்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது பேரூட்ட சத்துக்கள் எனப்படும் தழை, மணி, சாம்பல் சத்துக்கள். இச்சத்துக்களை மண்ணில் போதுமான அளவு பராமரித்தல் மிக அவசியம். இந்த சத்துக்கள் குறைபாடு ஏற்பட்டால் விளைச்சல் எதிர்பார்த்த அளவு இருக்க வாய்ப்பில்லை.

ஆகவே விளை நிலங்களில் பயிர் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான பேரூட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கும்படி பார்த்துக்கொள்வதும், நுண்ணுயிர் உரங்களை பயன்படுத்துவதும் மிக நல்ல பயனை கொடுக்கும் என்று வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. விவசாயிகள் ரசாயன உரங்களை பயன்படுத்தும்போது சாகுபடி செலவு அதிகரிக்கும் கூடவே மண்ணின் அசல் தன்மை முற்றிலும் பாதிக்கப்படும். அதுவே பாக்டீரியா நுண்ணுயிர்களால் தயாரிக்கப்பட்ட உயிர் உரங்களை பயன்படுத்தினால் மண்ணின் தன்மை காக்கப்படுவதுடன் சாகுபடியும் தரமானதாக இருக்கும் என்று மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சித்ராதேவி அறிவுறுத்தியுள்ளார்.

அவர் தனது அறிக்கையில் “அசோஸ்பைரில்லம், ரைசோபியம் ஆகிய உயிர் உரங்கள் காற்றில் உள்ள தழைச்சத்தை பெற்று பயிர்களுக்கு கொடுக்கவும், மண்ணில் இயற்கையாக உள்ள தழைச்சத்தை பயிர் கிரகிக்கவும் பெரிதும் துணைநிற்கின்றன. அதே போல், பயிர்களுக்கு மணிச்சத்தை பெற்றுத்தருவதில் பெரும்பங்கு வகிப்பது பாஸ்போபாக்டீரியா. சாம்பல் சத்தை பயிர்களுக்கு பெற்றுத்தரும் நுண்ணுயிர் உரம் இப்போது திரவ வடிவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு இந்த உயிர் உரங்கள் அனைத்தும் எளிதில் கிடைக்கும்படி அந்தந்த பகுதியில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களிலேயே விற்பனை செய்யப்படுகின்றன.

திரவ உயிர் உரம் உபயோகிப்பதால், மண்ணில் இயல்பாக உள்ள சாம்பல் சத்து கரையும் வடிவத்துக்கு மாற்றப்பட்டு பயிர்களால் எளிதாக பெற்றுக்கொள்ள முடிகிறது. இதே உயிர் உரங்கள் விதை நேர்த்திக்கு பயன்படுத்தும்போது நோய் தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம்.

அளவு மற்றும் உபயோகிக்கும் முறை

50 மில்லி லிட்டர் உயிர் உரம் கொண்டு ஒரு ஏக்கருக்கு தேவைப்படும் விதைகளை நேர்த்தி செய்யலாம். 200 மில்லி லிட்டர் திரவ உயிர் உரத்தை மக்கிய தொழு உரத்துடன் கலந்து நடவுக்கு முன்பாக நிலத்தில் இட வேண்டும் (இந்த அளவு ஒரு ஏக்கருக்கு).

மேலும், தண்ணீர் 1 லிட்டர் : உயிர் உரம் 1 மில்லி லிட்டர் என்ற விகிதத்தில் கலந்து, விதைப்பு செய்த 15வது, 30வது மற்றும் 45வது நாட்களில் தெளிக்கலாம்.

உயிர் உரங்களின் பயன்பாடு சரியான அளவுடன் முறையாக இருக்கும்பட்சத்தில் இடு பொருள் செலவு குறைந்து 25% வரை சேமிப்பு உறுதியாகிறது. மகசூலும் 15% அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.