தொழிலதிபர், பில்லியனர், பங்கு வர்த்தகர் என்று பல முகவரிகளுக்கு சொந்தக்காரரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மற்றும் முன்னாள் ஜெட் ஏர்வேஸ் தலைமை நிர்வாக அதிகாரி வினய் துபே இவர்கள் இருவர் இணைந்து நிறுவிய “ஆகாசா ஏர்” விமான நிறுவனம் தங்கள் சேவையை மிகக் குறைந்த கட்டணத்தில் வழங்க இருக்கிறது என்பதே இதன் பிரத்தியேக சிறப்பு.

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இந்த வருடம் ஜூலை மாதம் கேரியரில் 40% பங்குக்கு $35 மில்லியன் முதலீடு செய்தார். அதை தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடமிருந்து தடையில்லாச் சான்றிதழைப் பெற்றது.

மேக்ஸ் மற்றும் போயிங் ரக விமானங்கள் ஒப்பந்தம், 4 ஆண்டுகளில் ஆகாசாவின் இலக்கு

தங்கள் விமானம் ஆகாயத்தை தொட 2022-ம் ஆண்டு கோடை காலத்தை இலக்காக வைத்திருக்கிறது இந்நிறுவனம். மேலும் போயிங் நிறுவனத்திடம் 72 மேக்ஸ் 737 போயிங் ரக விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்னும் 4 ஆண்டுகளில் சுமார் 70 விமானங்களை சேர்ப்பதையும் குறிக்கோளாக கொண்டிருக்கிறது ஆகாசா ஏர் நிறுவனம்.

இலக்கை மேலும் வலுப்படுத்தும் ‘தி ரைசிங் ஏ’ லோகோ

இதற்கான லோகோ வடிவமைக்கும் பணியும் ஏறத்தாழ முடிவுற்றது. பரந்த ஆகாசத்தையும், ஒளிரும் சூரியனையும் மையப்படுத்தி, இரண்டின் நிறமான நீலம் மற்றும் ஆரஞ்சு நிறங்களின் சேர்க்கையில் ‘இட்ஸ் யுவர் ஸ்கை’ என்கிற தலைப்பில் ‘தி ரைசிங் ஏ’ என்கிற லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.