ராபி பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் பிப்ரவரி 15
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது “ராபி எனப்படும் குளிர்கால பருவ பயிர்கள் தற்போது காப்பீடு செய்யப்பட்டு வருகின்றன. இதில் திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் நெல் தரிசில் பயிறு வகைகளை காப்பீடு செய்து வருகிறார்கள் விவசாயிகள். நாளை அதாவது பிப் 15-ம் தேதியுடன் காப்பீடு செய்யப்பட வேண்டிய கால நிர்ணயம் முடியவிருக்கிறது.
அடங்கலுக்கு பதிலாக ‘விதைப்பு சான்றிதழ்’
கவனிக்க….இப்பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் என்ற உத்தேசம் உள்ள விவசாய பெருமக்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கலுக்கு பதிலாக ‘விதைப்பு சான்றிதழ்’ பெற வேண்டியது அவசியம் என்று திட்ட விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. ஆகவே இன்னும் ஒரு நாளைக்குள் விவசாயிகள் தேவைப்படும் ஆவணங்களை சமர்ப்பித்து பயிர்களை காப்பீடு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தோட்டக்கலை பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர்காப்பீடு
இதுமட்டுமல்ல புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2021-2022-ம் ஆண்டு ரபி தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகள் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் ஆகியவற்றை அணுகலாம். இதில் தக்காளி, வெண்டை, கத்தரி ஆகிய பயிர்களுக்கு கடைசி தேதி பிப் 15 கடைசி நாள் எனவும், வாழை, மரவள்ளி ஆகிய பயிர்களுக்கு பிப் 28 கடைசி நாள் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இச்செய்தியை படிக்கும் விவசாயிகள் அல்லது பிற நண்பர்கள் உரிய பயனாளிகளிடம் இதனை பகிரவும்.